பூக்கடையில் பார்க்கிங் தகராறு இருதரப்பு மோதல்: 6 பேர் கைது
பூக்கடை: பூக்கடை, ஆண்டர்சன் தெருவில், அழைப்பிதழ் அட்டை தயாரித்து விற்பனை செய்யும் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. குறுகிய பகுதி என்பதால், இங்கு வாகனம் நிறுத்துவதில் அடிக்கடி பிரச்னை ஏற்படும். அதன்படி, நேற்று முன்தினம் வாடிக்கையாளர் ஒருவர் அங்கு வாகனத்தை நிறுத்தி உள்ளார். அந்த வாகனத்தை பின்நோக்கி இயக்கியபோது, எதிரே உள்ள கடை மீது உரசியதாக கூறப்படுகிறது. இதனால், வாக்குவாதம் ஏற்பட்டு, இரு கடைகளைச் சேர்ந்த ஊழியர்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில், காயமடைந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து விசாரித்த எஸ்பிளனேடு போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.