பயணியர் நிழற்குடைகள் ஆக்கிரமிப்பு தனியார் நிறுவன ஊழியர்கள் அடாவடி
எண்ணுார், நநிழற்குடைகளை ஆக்கிரமித்து, பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் 'பார்க்கிங்' செய்யப்பட்டிருப்பதால், பயணியர் அவதியடைந்து வருகின்றனர்.எண்ணுார், மின்வாரிய அலுவலகம் எதிரே, பேருந்து பயணியர் வசதிக்காக, இரண்டு நிழற்குடைகள் உள்ளன. இந்த நிழற்குடையை தினசரி, நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், நிழற்குடைகளை ஆக்கிரமித்து, தனியார் நிறுவன ஊழியர்களின் பைக் மற்றும் ஸ்கூட்டர் உள்ளிட்ட வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதால், பயணியர் கடும் அவதியடைந்து உள்ளனர். மேலும், மழை மற்றும் வெயில் காலங்களில், நிழற்குடையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.இதுகுறித்து, எண்ணுார் போலீசார் கூறியதாவது:தனியார் கனரக வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள், இதுபோன்று பைக், ஸ்கூட்டர்களை நிறுத்திச் செல்கின்றனர்.நிறுவன வளாகத்தில், பிரமாண்ட பார்க்கிங் வசதி இருந்தும், இதுபோன்று நிழற்குடையில் நிறுத்தி வைத்து விட்டுச் செல்கின்றனர்.ஏற்கனவே, போக்குவரத்து காவல் துறையிடம் தகவல் தெரிவித்து, பார்க்கிங் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.இருப்பினும், தொடர்ச்சியாக பார்க்கிங் செய்து வருகின்றனர். மீண்டும், அனுமதியின்றி நிழற்குடைகளுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் மற்றும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.