உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எழும்பூர் நிலையத்தில் மாற்று ஏற்பாடு செய்யாததால் பயணியர் கடும் அவதி

எழும்பூர் நிலையத்தில் மாற்று ஏற்பாடு செய்யாததால் பயணியர் கடும் அவதி

சென்னை: எழும்பூரில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், தற்காலிக ஏற்பாடுகள் போதிய அளவில் செய்யாததால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக, எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. அடுத்த 50 ஆண்டுகளில் ரயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, எழும்பூர் ரயில் நிலையம், 734.91 கோடி ரூபாயில் மறு சீரமைக்கும் பணி, கடந்தாண்டு பிப்ரவரியில் துவங்கியது. காந்தி இர்வின் சாலைக்கு பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்திற்கான அடித்தளம் அமைக்கும் பணி முடிந்துள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே, பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்திற்கு அடித்தள பணிகள் முடியும் நிலையில் உள்ளன. ரயில் நிலையங்களின் உட்பகுதிகளில் நடைமேம்பாலம், நடைமேடை விரிவாக்கம், மேற்கூரை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. இதற்காக, பல்வேறு விரைவு ரயில்களின் சேவையிலும் மாற்றம் செய்யப் பட்டுள்ளன. எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய சில ரயில்கள் தாம்பரம், சென்னை கடற்கரையில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படுகிறது. ஆனாலும், ரயில் நிலையங்களில் பயணியருக்கான போதிய ஏற்பாடுகள் செய்யாததால், பயணியர் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒரு ஆண்டுக்கு மேலாக பணிகள் நடந்து வருகின்றன. இதனால், ரயில்கள் இயக்கும் இடமாற்றம், நடைமேடை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அங்கெல்லாம் மாற்று ஏற்பாடுகள் செய்யவில்லை. ரயில்கள் புறப்பாடு, வருகை போதிய அளவில் பலகைகள் இல்லை. அதுபோல், நடைமேடைகளில் ரயில் பெட்டிகளை காட்டிலும் டிஜிட்டல் பலகையும் இல்லை. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர். எனவே, மேம்பாட்டு பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு வரும் வரையில், எழும்பூரில் நிலையத்தில் தற்காலிகமாக கூடுதல் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை