சோழிங்கநல்லுார், தென்சென்னை புறநகர் பகுதியில் உள்ள 62 ஏரிகள், நுாற்றுக்கும் மேற்பட்ட குளங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் வடிகால்களில் இருந்து வடியும் நீர், ஒக்கியம்மடு வழியாக, பகிங்ஹாம் கால்வாயை அடைந்து, முட்டுக்காடு கடலில் கலக்கிறது.மொத்த நீரும் வடியும் துரைப்பாக்கம், ஒக்கியம்மடு, 100 அடி அகலத்தில் உள்ளது. 'மிக்ஜாம்' புயல் மழையில், இதில் ஆகாயத் தாமரை அதிகம் சேர்ந்து அடைப்பு ஏற்படுத்தியதால், வெள்ளம் வடிவதில் தாமதம் ஏற்பட்டது.அப்போது, ஒக்கியம்மடுவில் சிக்கிய ஆகாயத் தாமரை, 'பொக்லைன்' இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. இதற்காக, ஒக்கியம்மடுவின் மேல் உள்ள நடைபாதை சுவர் மற்றும் தடுப்புக் கம்பிகள் அகற்றப்பட்டன. மழை நின்ற பின், அதை சீரமைத்திருக்க வேண்டும்.ஆனால், ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், நடைபாதையை சீரமைக்கவில்லை. ஓ.எம்.ஆர்., இதர பகுதியை விட, ஒக்கியம்மடுவில் அகலம் குறைவாக உள்ளது.அணுகு சாலை இல்லாமல், குறுகிய நடைபாதை மட்டும் உள்ளது. இதனால், பாதசாரிகள் நடைபாதை வழியாக செல்கின்றனர். இரவு நேரத்தில், வெளிச்சம் குறைவாக உள்ளதால், பாதசாரிகள் இடிக்கப்பட்ட தடுப்பு பகுதியில் தடுக்கி, தண்ணீர் அல்லது சாலையில் விழும் அபாயம் உள்ளது.தனிநபர் சென்று தண்ணீரில் விழுந்து விபத்தில் சிக்கினால், வெளியே தெரிய வாய்ப்பில்லை. முக்கிய சாலை என்பதால், நடைபாதை தடுப்பை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.