உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எச்சரித்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் சடையங்குப்பத்தை சூழ்ந்த வெள்ளம் பெட்டி, படுக்கைகளுடன் காலி செய்த மக்கள்

எச்சரித்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் சடையங்குப்பத்தை சூழ்ந்த வெள்ளம் பெட்டி, படுக்கைகளுடன் காலி செய்த மக்கள்

மணலி: பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 9,500 கனஅடி நீர் கிராமத்தை மூழ்கடித்ததால் பீதியடைந்த சடையங்குப்பம் மக்கள், வீடுகளில் இருந்து வெளியேறி, உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். நம் நாளிதழில் எச்சரித்தும், அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால், மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், நேற்று முன்தினம் மாலை 6:00 மணி நிலவரப்படி, விநாடிக்கு, 9,500 கன அடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர், கொசஸ்தலை ஆற்றின் கடைமடை பகுதிகளான, வடசென்னையின், விச்சூர், வெள்ளிவாயல், நாப்பாளையம், இடையஞ்சாவடி, மணலிபுதுநகர், சடையங்குப்பம் பகுதிகளில், கரையின் இருபுறங்களையும் தொட்டு ஆர்ப்பரித்து ஓடி, எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது. கொசஸ்தலை ஆற்றின் கரை பலவீனமாகவும், மேம்பாலம் அருகே, 50 - 70 அடி துாரத்திற்கு கரை இல்லாமலும் இருப்பதால், மழைக்காலத்தில் ஊருக்குள் வெள்ள நீர் சூழும் அபாயம் இருப்பதாக, இரு நாட்களுக்கு முன் நம் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துாங்கி வழிந்ததன் விளைவாக, கொசஸ்தலை ஆற்றில் நேற்று வெளியேறிய உபரி நீர், சடையங்குப்பம் 5வது தெருவழியாகவும், மேம்பாலம் அருகே கரையே இல்லாத இடைவெளி வழியாகவும், ஊருக்குள் உட்புகுந்து வருகிறது. இதன் காரணமாக, சடையங்குப்பம் கிராமத்தில், 1- 5வது தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்து, அப்பகுதியினரின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சிலர், தங்கள் உடைமைகளுடன், உறவினர் வீடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். காலையில் ஏற துவங்கிய தண்ணீர், மாலை 6:00 மணிக்கு பின்பும் தொடர்ந்து வருவதால், இரவில் மக்களால் நிம்மதியாக துாங்கமுடியாது. ஆண்டுதோறும் இதே பிரச்னை இருப்பதால், கரையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை