உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., இணைப்புக்காக துருப்பிடிக்காத உயர்மட்ட இரும்பு பாலம் பகிங்ஹாம் கால்வாயில் அமைக்க கிடைத்தது அனுமதி

 இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., இணைப்புக்காக துருப்பிடிக்காத உயர்மட்ட இரும்பு பாலம் பகிங்ஹாம் கால்வாயில் அமைக்க கிடைத்தது அனுமதி

சென்னை: இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்., சாலைகளை இணைக்கும் வகையில், பகிங்ஹாம் கால்வாயின் குறுக்கே துருப்பிடிக்காத இரும்பு உயர்மட்ட பாலத்தை கட்டுவதற்கு, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி வழங்கியுள்ளது. இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலையையும், ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலையையும் இணைக்கும் வகையில், நெடுஞ்சாலைத் துறை வாயிலாக ஆறுவழிச்சாலை அமைக்க 2021ல் திட்டமிடப்பட்டது. துரைப்பாக்கத்தில், பல்லாவரம் ரேடியல் சாலையில் துவங்கி, நீலாங்கரை வரை 1.45 கி.மீ.,க்கு சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. துரைப்பாக்கம் அருகே பகிங்ஹாம் கால்வாயை, இந்த சாலை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதற்காக, கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டது. சாலை விரிவாக்க பணிக்கு 35 கோடி ரூபாய், பாலம் கட்டுவதற்கு 38 கோடி ரூபாய், நில எடுப்பு பணிக்கு 250 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது. நிதி ஒதுக்கிய அரசு அரசு நிதி ஒதுக்கிய நிலையில், நெடுஞ்சாலைத் துறை வாயிலாக ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, துரைப்பாக்கம் ரேடியல் சாலை முதல் பகிங்ஹாம் கால்வாய் வரை 680 மீட்டருக்கு ஆறுவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. பகிங்ஹாம் கால்வாயில் பாலம் கட்டுவதற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. பகிங்ஹாம் கால்வாயின் மற்றொரு பகுதியில் இருந்து நீலாங்கரை வரை, சாலையை விரிவாக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், சாலை விரிவாக்க பணிகள் முடங்கின. இந்நிலையில், பகிங்ஹாம் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி வழங்கியுள்ளது. இங்கு துருப்பிடிக்காத இரும்பு உயர்மட்ட பாலத்தை கட்டுவதற்கான முன்னேற்பாடுகளை நெடுஞ்சாலைத் துறையினர் துவங்கியுள்ளனர். இறுதி ஒப்புதல் இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறையின் சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: துரைப்பாக்கம் அருகே துருப்பிடிக்காத இரும்பு பயன்படுத்தி, 36 மீட்டர் நீளத்திற்கு பகிங்ஹாம் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டப்படவுள்ளது. பாலத்தின் இரண்டு புறங்களிலும், இணைப்பு போடப்படவுள்ளது. அதன்படி 300 மீட்டர் நீளத்திற்கு இந்த பாலம் இருக்கும். இந்த சாலை வரக்கூடாது என்ற எண்ணத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த தடைகளை நெடுஞ்சாலைத் துறை தகர்த்து பணிகளை துவங்கவுள்ளது. ஏற்கனவே, 680 மீட்டருக்கு ஆறுவழிச்சாலை முடித்துள்ளோம். நில எடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. எஞ்சிய சாலை பணிகள் விரைவில் துவங்கும். பகிங்ஹாம் கால்வாயில் பாலம் கட்டுவதற்கு, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்திடம் மூன்று கட்ட அனுமதியை பெற வேண்டும். ஏற்கனவே இரண்டு கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கவுள்ளது. அதில் இறுதி ஒப்புதல் பெறப்பட்டு, பகிங்ஹாம் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டுமானம் துவங்கும். தமிழக நெடுஞ்சாலைகளில் முதல் முறையாக இந்த துருப்பிடிக்காத இரும்பு பாலம் கட்டப்படவுள்ளது. இதற்கு, மத்திய உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையம் ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை