சென்னை: பெரும்பாக்கத்தில், 68.60 கோடி ரூபாயில் கட்டப்படும் அரசு மருத்துவமனை, ஜன., மாதம் திறக்கப்படும் என, தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் கூறினார். சோழிங்கநல்லுார் தொகுதி, தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி. இங்கு, 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த தொகுதி, இ.சி.ஆர்., ஓ.எம்.ஆர்., மற்றும் வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையை உள்ளடக்கியது. விபத்து, மாரடைப்பு போன்ற அவசர சிகிச்சைக்கு, கிண்டி, ராயப்பேட்டை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. அதனால், அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை கட்ட வேண்டும் என, 15 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், பெரும்பாக்கத்தில், 5 ஏக்கர் இடத்தில், 58.60 கோடி ரூபாயில், ஒரு லட்சம் சதுர அடி பரப்பில், 262 படுக்கை, அறுவை சிகிச்சை, பிரேத பரிசோதனை, காவல் உதவி மையம் உள்ளிட்ட வசதிகளுடன், இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது. மேலும், 10 கோடி ரூபாயில் மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மருத்துவமனை, ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரியின் கீழ் செயல்படும். இங்கு, பணியின் தரம், வேகம் குறித்து, தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் ஆய்வு செய்தபின், “தொகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுகிறது. இங்கு, விபத்து, மாரடைப்பு உள்ளிட்ட உயிர் காக்கும் அவசர சிகிச்சை பெற முடியும். அனைத்து வசதிகளுடன் அமைவதால், நீண்ட துாரம் சென்று சிகிச்சை பெறுவது தவிர்க்கப்படும். ஜன., மாதம் திறக்கும் வகையில், பணி வேகமாக நடக்கிறது,” என்றார்.