உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கான்கிரீட் கால்வாய்க்கு மாற்றாக குழாய் வடிகால் வசதி புது முயற்சி! : பலன் கிடைத்ததால் விரிவாக்கம் செய்கிறது மாநகராட்சி

கான்கிரீட் கால்வாய்க்கு மாற்றாக குழாய் வடிகால் வசதி புது முயற்சி! : பலன் கிடைத்ததால் விரிவாக்கம் செய்கிறது மாநகராட்சி

வேளச்சேரியில், மழைநீர் வடிகால் அமைக்க முடியாத குறுகிய தெருக்களில், குழாய் வடிகால் கட்டமைப்பு அமைக்கப்பட்டது. இதனால், இரு மாதங்களாக பெய்த மழையில், குழாய் வடிகால் அமைத்த தெருக்களில் மழைநீர் தேங்கவில்லை. எனவே, இத்திட்டத்தை சென்னையின் இதர மண்டலங்களிலும் விரிவாக்கம் செய்ய, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னை, அடையாறு மண்டலம், 175, 176, 177 ஆகிய வார்டுகள், வேளச்சேரி பகுதிக்கு உட்பட்டவை. இங்கு, ஒவ்வொரு பருவமழைக்கும் தெருக்களில் வெள்ளம் தேங்கி, வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படும்.இதற்கு நிரந்தர தீர்வு காண வடிகால், மூடு கால்வாய், குளம் அமைக்கப்படுகிறது. ஆனால், சிறிய தெருக்கள் 5 முதல் 10 அடி அகலத்தில் உள்ளதால், வடிகால் கட்டினால் தெருவின் அகலம் குறைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால், வடிகால் போன்று குழாய் பதித்து மழைநீரை வடியச் செய்ய, மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி, வேளச்சேரி 177வது வார்டில் டான்சிநகர், அன்னை இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில், 25 தெருக்களில், 800 மீட்டர் துாரத்திற்கு, உடையாத உயர் அடர்த்தி பாலி எத்திலின் குழாய் பதிக்கப்படுகிறது. இப்பணி, 50 லட்சம் ரூபாயில் நடக்கிறது. மேலும், 176வது வார்டில், எம்.ஜி.ஆர்., நகர், லட்சுமிநகர் உள்ளிட்ட பகுதிகளில், 180 மீட்டர் துாரத்தில், 2.50 லட்சம் ரூபாயில் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. அதேபோல், 168, 171, 175, 178, 179, 180 ஆகிய வார்டுகளிலும், வடிகால் அமைக்க முடியாத தெருக்களில், இந்த குழாய் வடிகால் அமைக்கப்படுகிறது. மொத்தமாக, 2 கோடி ரூபாயில் இந்த பணி நடைபெறுகிறது.

உடையாத குழாய்

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:அடையாறு மண்டலத்தில் சில பகுதிகளில், கடல்நீர் மட்டமும், நிலத்தடி நீர் மட்டமும் 1, 2 அடி ஆழத்தில் சமமாக உள்ளன. அந்த தெருக்களில், 2 அடி ஆழத்தில் பள்ளம் எடுத்து வடிகால் அமைத்தால், வெள்ள நீரோட்டம் சீராக இருக்காது.அதுபோன்ற தெருக்களில், வெள்ள பாதிப்பை தடுக்க வீராங்கால், பகிங்ஹாம் கால்வாய்கள், அடையாறு ஆறு ஆகிய நீர்நிலைகளில் சேரும் வடிகால் பகுதியில், 'ஷட்டர்' அமைத்து, மோட்டார் வாயிலாக நீரை இறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதுபோல், மழைநீர் வடிகால் அமைக்க முடியாத தெருக்களில் தேங்கும் வெள்ளத்தை, குழாயில் செல்லும் வகையில் கட்டமைக்கிறோம். இதற்காக, லாரி ஏறினாலும் உடையாத, உயர் அடர்த்தி பாலி எத்திலின் குழாய் பதித்து, வடிகால் அமைக்கப்படுகிறது.இந்த குழாய், 2 அங்குலம் தடிமன், அரை மற்றும் 1 அடி சுற்றளவு கொண்டது. ஒரு குழாய், 40 அடி நீளம் கொண்டது. மழைநீர் வடிகால் இல்லாத தெருக்களில், 2 அடி ஆழத்தில் நீரோட்டம் பார்த்து, இந்த குழாயை பதித்து, அதை அருகிலுள்ள மழைநீர் வடிகாலில் இணைக்கிறோம். சாலையில் இருந்து வடியும் மழைநீர், இந்த குழாயில் சேரும் வகையிலும், குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கவும், 16 அடி முதல் 33 அடி இடைவெளியில், முக்கால் அடி சுற்றளவில் ஜல்லடை அமைக்கிறோம்.இதனால், தெருக்களில் மழைநீர் தேங்குவதும், தாழ்வான வீடுகளில் வெள்ளம் புகுவதும் தடுக்கப்படும். வாகன போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாது. தற்போது, 90 சதவீத தெருக்களில், குழாய் வடிகால் பதிக்கப்பட்டு உள்ளது. இதர மண்டலங்களிலும், இதேபோன்ற கட்டமைப்பை அமைக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மிகவும் பயனளிக்கும்

கடந்த ஆண்டுகளில், லேசான மழைக்கு தெருக்களில் மழைநீர் தேங்கிய நிலையில், தற்போது பெய்யும் மழைக்கு, குழாய் வடிகால் அமைத்த எந்த தெருவிலும் மழைநீர் தேங்கவில்லை. வடிகால் கட்டாமல் விடுபட்ட தெருக்கள், குறுகலான தெருக்களில், குழாய் வடிகால் மிகவும் பயன் அளிக்கும்.- குமாரராஜா, 61,அன்னை இந்திராநகர், வேளச்சேரி

செலவு குறைவு

பொதுவாக, 2 அடி ஆழத்தில் பள்ளம் எடுத்து, ஒன்றரை அடி அகலத்தில் கான்கிரீட் கலவையால் வடிகால் அமைக்க, 3 அடி துாரத்திற்கு, 25,000 முதல் 28,000 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், குழாய் வடிகால் அமைக்க, 12,000 முதல் 15,000 ரூபாய் வரை மட்டுமே செலவாகிறது. சென்னை மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் சூழலில், செலவீனத்தை குறைக்க, குழாய் வடிகால் சிறந்த வழிமுறையாக உள்ளது. அடையாறு மண்டலத்தில், இச்செயல் திட்டம் பெரும் பயனளித்த நிலையில், இதை இதர மண்டலங்களிலும் விரிவாக்கம் செய்ய, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சட்ட விரோத இணைப்புக்கு 'செக்'தெருக்களில், நீரோட்டத்தை பொறுத்து, 2 அடி ஆழம் வரை குழாய் பதிக்கப்படுகிறது. அதை வலுவாக்கும் வகையில், குழாயை சுற்றி கான்கிரீட் கலவையால் பலப்படுத்தப்படும். ஏற்கனவே, குடிநீர், கழிவுநீர் குழாய்கள், மின் கேபிள் பதித்திருந்தால், நீரோட்டத்திற்கு ஏற்ப மேல், கீழ் என, குழாய் வடிகால் பதிக்கப்படுகிறது. சில தெருக்களில், கான்கிரீட் வடிகாலில் துளையிட்டு சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு கொடுக்க முடியும். சென்னையில், 80 சதவீத வடிகாலில், கழிவுநீர் இணைப்பு உள்ளது. அதுபோன்று, இந்த குழாய் வடிகாலை உடைத்து, சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு கொடுக்க முடியாது என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

S. Neelakanta Pillai
நவ 18, 2024 21:19

மிக மிக சாதாரண ஒரு விஷயத்தை ஏதோ புதிய கண்டுபிடிப்பு போல பாசாங்கு காட்டுவது எதற்கு இந்த வீண் வேலை.


Subramanian
நவ 18, 2024 06:39

Veeranam 2?


Venkateswaran Rajaram
நவ 18, 2024 06:15

எதையுமே ஊழல் பண்ணாமல் தரத்துடன் செய்தால் அணைத்து திட்டங்களும் வெற்றி பெறும் ...இந்த கொள்ளையர்கள் அப்படியா செய்ய போகிறார்கள் ... திட்டம் போடுவதே கொள்ளை அடிக்கத்தான்


chennai sivakumar
நவ 18, 2024 06:12

As saying new broom sweeps well, the strech connected in this method is working well in our area and it must be acknowledged.


chennai sivakumar
நவ 18, 2024 06:09

நாங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு ஸ்ட்ரெச் தற்போது பதிக்க பட்டு உள்ளது. இந்த திட்டத்தினால் செலவு குறைவு. ஆனால் கூலி அதிகம். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஜங்ஷன் பாக்ஸ் போன்று கட்ட வேண்டிய செலவு உள்ளது. Something similar to house disge water pits. இது வேண்டுமானால் குட்டி தெருக்களுக்கு மிகவும் சிறந்த முறையே தவிர பெரிய சாலைகளுக்கு ஒத்து வருமா என்பது கேள்விக்குறியே. காரணம் குப்பைகள் அடித்து கொண்டு நீரோட்டம்.பாதிக்க படும் போது அவற்றை சுத்தம் செயும் செலவு எகிறி விடும். கடைசியில் அண்ணாமலை திரைப்படத்தில் வரும் வசனம் போல " கூட்டி கழித்து பாரு. கணக்கு சரியாக வரும்" என்று ஆகி விடும். ஹி ஹி ஹி


முக்கிய வீடியோ