| ADDED : டிச 29, 2025 07:06 AM
சென்னை: சந்தேகங்கள் மற்றும் இதர பிரச்னை குறித்து, சென்னை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளை தொடர்பு கொண்டால் இ - மெயில் அனுப்ப சொல்வதாக, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னை, அண்ணா சாலையில், பி.எஸ்.என்.எல்., மத்திய மண்டல அலுவலகம் உள்ளது. எட்டு மாடிகள் உடைய இந்த கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் ஒரு வாரத்திற்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்திற்கு பின், மொபைல் மற்றும் இணைய சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இன்னும் இப்பிரச்னை தீராததால் அவதிப்படும் வாடிக்கையாளர்கள், சென்னையில் உள்ள பல பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் அதிகாரிகள், 'இ - மெயில் அனுப்புங்கள்' எனக்கூறி கறார் காட்டுவதாக, வாடிக்கையாளர்கள் குறை கூறுகின்றனர். இது குறித்து பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., குறித்த புகார்களுக்கு, வாடிக்கையாளர் சேவை மையத்தின் எண் செயல்படுகிறது. இதில் புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகிறோம் என சொல்கின்றனர். ஆனால், அந்த புகாருக்கு தீர்வு காணப்படுவதில்லை. பகுதி பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும்போது, அலுவலகத்திற்கு வாருங்கள் என்கின்றனர். அங்கே சென்றால், 'புகார் குறித்து இ - மெயில் அனுப்புங்கள் நடவடிக்கை எடுக்கப்படும்' எனக்கூறி விரட்டுகின்றனர். குறிப்பாக, முதிய வாடிக்கையாளர்கள் பலரும் சிரமப்படுகின்றனர். பிரச்னைகள் குறித்த புகார்களுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.