ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்த சிறுமி உடல்நிலை சீராக உள்ளது நீதிபதிகளிடம் போலீஸ் விளக்கம்
சென்னை, சென்னை உயர் நீதிமன்ற முதல் தளத்தில் இருந்து குதித்த 14 வயது சிறுமியின் உடல் நிலை சீராக உள்ளது என, நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. தன் 14 வயது மகளை காணவில்லை என, நீலாங்கரை போலீசில் புகார் கொடுத்த அவரது தந்தை, மகளை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன், கடந்த 12ம் தேதி விசாரித்தனர். அப்போது, 'தன் தந்தையுடன் செல்ல விருப்பம் இல்லை; அந்தமானில் உள்ள தாயுடன் செல்ல விரும்புகிறேன்' என, சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரை கெல்லீசில் உள்ள அரசு பெண்கள் குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதி ல் மனமுடைந்த சிறுமி, உயர் நீதிமன்றத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து, சிகிச்சை பெ ற்று வருகிறார். இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, ''ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக உள்ளது. முதுகு தண்டுவடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது. அரசு காப்பகத்தில் தங்கியிருக்க, தனக்கு விருப்பம் இல்லை என, தொடர்ந்து சிறுமி கூறிவருகிறார்,'' எனக்கூறி, மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விபரங்கள் அடங்கிய கடிதத்தை அளித்தார். இதையடுத்து நீதிபதிகள், 'கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில், சிறுமிக்கு ஆலோசனை வழங்கும் வகையில் வசதிகள் உள்ளதா; அவரை அங்கு அனுமதிப்பது பாதுகாப்பானதா என, காவல்துறை அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.