சென்னை, பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உள்ள, 27,000 வீடுகளில், பயனாளிகள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், 428 கோடி ரூபாயில், 3,276 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில், 144 வீடுகள், செம்மஞ்சேரியில் கட்டி திறக்கப்பட்டன. மீதமுள்ள வீடுகள், பெரும்பாக்கம் திட்டத்தில் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது, 95 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன.இந்த வீடுகள், நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை வாயிலாக, பகிங்ஹாம் கால்வாய் கரையோரம் மற்றும் இதர நீர்நிலைகளின் அருகில் வசிப்போருக்காக கட்டப்பட்டு வருகின்றன.இந்த குடியிருப்புகளை காட்டி, அதில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி, இடைத்தரகர்கள் சிலர், வீடற்ற ஏழை மக்களை ஏமாற்றி, பணம் பறித்து வருகின்றனர்.இதனால், பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என, வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.வாரிய அதிகாரிகள் கூறியதாவது:தற்போது கட்டப்படும் வீடுகள், நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை வாயிலாக வழங்கப்படும். ஒரு வீட்டுக்கு, 4 லட்சம் ரூபாய் வரை, ஏழை மக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருங்கள்.இதுபோன்று முன்பு, போலி குடியிருப்பு ஆணை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பெரும்பாக்கம் போலீசார் கூறுகையில், 'இரண்டு ஆண்டுகளில், புதிய குடியிருப்பைக் காட்டி, பணம் வாங்கி ஏமாற்றியதாக அதிக எண்ணிக்கையில் புகார்கள் வருகின்றன. பெயர், முகவரி தெரியாதவர்களிடம் பணம் கொடுத்தும் ஏமாறுகின்றனர். பொதுமக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்' என்றனர்.