நாடகமாடிய மாணவனுக்கு போலீசார் எச்சரிக்கை
கோயம்பேடு; மொபைல் போனை பேருந்தில் தொலைத்துவிட்டு, மர்ம நபர் பறித்து சென்றதாக நாடகமாடிய கல்லுாரி மாணவனை, போலீசார் கண்டித்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்த அரவிந்த், 19, உறவினர் வீட்டில் தங்கி குரோம்பேட்டையில் உள்ள கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு ஒரு புகார் அளித்தார். அதன் விபரம்: விடுமுறைக்கு சொந்த ஊர் சென்று, இம்மாதம் 8ம் தேதி கோயம்பேடு வந்து, நண்பர் அபிஷேக், 19, என்பவருடன் தடம் எண், '15எப்' மாநகர பேருந்தில் ஏறினேன். பேருந்து நிலையத்தை விட்டு வெளியே செல்லும்போது, அடையாளம் தெரியாத நபர், பேருந்தின் ஜன்னல் வழியாக என் மொபைல் போனை பறித்தார். என் மொபைல் போனை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. கோயம்பேடு போலீசார் விசாரணையில், பேருந்தில் மொபைல் போனை அரவிந்த் தொலைத்தது தெரிந்தது. போனை பறித்து சென்றதாக நாடகமாடியதை அறிந்த போலீசார், அரவிந்தை எச்சரித்து அனுப்பினர். அவரது புகார் மீதான நடவடிக்கையையும் கைவிட்டனர்.