சென்னை சென்னையில் இரண்டாவது கட்டமாக மூன்று வழித்தடங்களில் 69,180 கோடி ரூபாய் செலவில், 119 கி.மீ., நீளத்திற்கு நடக்கும் பணிகள், 2028ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் சேவை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதுார் - பரந்துார் 50 கி.மீ., கோயம்பேடு - ஆவடிக்கு, திருமங்கலம், முகப்பேர் வழியாக 17 கி.மீ., சிறுசேரி - கிளாம்பாக்கதுக்கு, கேளம்பாக்கம் வழியாக 26 கி.மீ., இந்த தடங்களில், மொத்தம் 93 கி.மீ.,க்கு மெட்ரோ ரயில் நீட்டிப்பு செய்ய சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.சிறுசேரி - கிளாம்பாக்கம், கோயம்பேடு - ஆவடி மெட்ரோவுக்கான சாத்திய கூறு அறிக்கை ஏற்கனவே தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதுார் - பரந்துார் இடையேயான மெட்ரோ ரயில் சாத்தியக் கூறு அறிக்கையை, தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் சித்திக் நேற்று வழங்கினார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டோன் எலியாசர் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். இந்த வழித்தடத்தில் 43.63 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை, 19 நிலையங்களுடன் அமைக்கப்பட உள்ளது. 10,712 கோடி ரூபாய் செலவாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதுார்- பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தில் தற்போதைய நிலவரப்படி, ஸ்ரீபெரும்புதுார் வரை பயணியர் நெரிசல் அதிகமாக இருக்கும். பரந்துார் விமான நிலையம் அமையும் போது, இந்த தடத்தில் மேலும் கூட்டம் அதிகரிக்கும். இந்த சாத்திய கூறு அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த பிறகு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி மேற்கொள்வோம். இந்த தடத்தில் பெரும்பாலும் மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிட்டுள்ளோம். புதியதாக அமைய உள்ள பரந்துார் விமான நிலையம் அருகே மட்டுமே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்கள் செல்ல வழிவகை செய்யப்படும்.இதேபோல், சிறுச்சேரி - கிளாம்பாக்கம், கோயம்பேடு - ஆவடிக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டுமென தமிழக அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.