| ADDED : பிப் 10, 2024 12:16 AM
சென்னை,சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், வடகரை சந்திப்பில் துவங்கும் மாதவரம் நெடுஞ்சாலை, மாதவரம் சின்ன ரவுண்டானாவில் வடக்கு உள்வட்டச் சாலையில் இணைகிறது. இந்த சாலை, 6 கி.மீ., துாரமுடையது.'மிக்ஜாம்' புயலில் கொட்டித் தீர்த்த கனமழையால் ரெட்டேரி, புழல் ஏரி உள்ளிட்டவை நிரம்பி வழிந்தன. அதில் இருந்து வெளியேறிய உபரிநீர், மாதவரம் நெடுஞ்சாலையில் சூழ்ந்தது. இதனால், 10 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது. வெள்ளம் வடிந்த நிலையில், பல இடங்களில் சாலை கடுமையாக சேதம் அடைந்தது. தற்காலிகமாக அவற்றில் கருங்கல் ஜல்லியை கொட்டி, நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்துள்ளனர்.வாகனங்கள் செல்லும்போது, காற்றில் மண் துகள்கள் பரவுவதால், இச்சாலையில் பயணிக்கும் பலரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் சேதமடைந்த இடங்களை சீரமைக்க, 90 லட்சம் ரூபாய் அரசு வழங்கிஉள்ளது. வருங்காலங்களில் வெள்ளச் சேதம் ஏற்படாமல் தடுக்க, சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளது.இதற்காக, 30 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரித்து நெடுஞ்சாலைத்துறை வாயிலாக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில், இப்பணிக்கு நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.