அரங்கம் நிறைந்த கரகோஷத்தில் பிரின்ஸ் ராமவர்மா இசை கச்சேரி
சூரியன் அஸ்தமனமாகும் அந்திப் பொழுதில், அரங்கை அலங்கரிக்க திரண்டிருந்த ரசிகர்களின் கண்களில், பிரகாசத்தை உண்டு செய்யும் விதமாக, 'எவ்வரி போதன' என்ற ஆபோகி வர்ணத்தைப் பாடி, நிகழ்ச்சியை துவக்கினார், பிரபல வாய்ப்பாட்டு கலைஞர் பிரின்ஸ் ராம வர்மா.அடுத்து, பாலமுரளி கிருஷ்ணா இயற்றிய, 'பிறையணியும் பெருமான்' எனும் ஹம்ஸத்வனி கீர்த்தனையை பாடி, இனிமை சேர்த்தார். இதில் அவர் வழங்கிய ஸ்வரங்கள், மேலும் இனிமை கூட்டின.தொடர்ந்து, லலிதா தாசர் இயற்றிய, 'பாவனகுரு' கீர்த்தனையை, ஹம்ஸா நந்தி ராகம், ரூபக தாளத்தில், ஸ்வரங்களுடன் பாடி, அனைவரையும் புன்னகைக்க வைத்தார். அடுத்து, ராமநாதன் இயற்றிய, 'என்ன குற்றம் செய்தேனோ' கீர்த்தனையை, கன்னியாகுமரி பகவதி மேல் இனிமையாக பாடினார். தொடர்ந்து, பெஹாக் ராகத்தை மிக உணர்ச்சியுடன் பாடியதும், வயலினில் வினு வழிமொழிந்து வாசித்ததும் அடடா..! அரங்கமே அதிர்ந்தது.பின், நீலகண்ட சிவன் இயற்றிய, 'சங்கரா நின் கருணை' கீர்த்தனையை, உயர்வாக பாடினார். இதில், கற்பனை ஸ்வரங்களை தோரணமாக அமைத்து, சங்கரனுக்கு ஆபரணமாக்கினார். அச்சமயம் ரசிகர்களின் ரசனை உயிர்ப்பித்து, காண்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருந்தது.தனி ஆவர்த்தனத்தில், மிருதங்கம் ஹரிகுமார், கடம் கார்த்திக் மற்றும் மோர்சிங் பையனுார் கோவிந்த பிரசாத் ஆகியோர், தங்கள் திறமையை வெளிப்படுத்தி, சபையோர்களை பரவசத்தில் ஆழ்த்தி, வரவேற்பு பெற்றனர்.இறுதியாக, கதனகுதுாகலம் ராகத்தில், பாலமுரளி கிருஷ்ணா இயற்றிய தில்லானாவை பாடி நிறைவு செய்தார். ரசிகா பைன் ஆர்ட்ஸ் ஏற்பாடில், மேற்கு மாம்பலத்தில் நடந்த இந்த கச்சேரிக்கு, ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் துள்ளி வந்த கைத்தட்டல்களை வெகுமதியாக பெற்றார் பிரின்ஸ் ராமவர்மா. -- நமது நிருபர் -