உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் மினி பஸ்கள் இயக்க தனியாருக்கு அனுமதி

சென்னையில் மினி பஸ்கள் இயக்க தனியாருக்கு அனுமதி

சென்னை : தமிழகத்தில் மினி பஸ்களுக்கான புதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது. மினி பஸ்கள் கட்டணமும் மாற்றப்பட்டு உள்ளது. மேலும், சென்னையில் முதல்முறையாக மினி பஸ்கள் இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சென்னையை தவிர, மாவட்ட பகுதிகளில் நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும் வகையில், 2,950 தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நிலவரப்படி, 20 கி.மீ., வரை மினி பஸ்கள் இயக்கலாம். அதில், 4 கி.மீ., ஏற்கனவே உள்ள வழித்தடங்களில் செல்லலாம். மீதமுள்ள, 16 கி.மீ., புதிய வழித்தடத்தில் இயக்க வேண்டும்.இதற்கிடையே, புதிய மினி பஸ் வரைவு திட்டம் குறித்து, தமிழக அரசிதழில், கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி வெளியிடப்பட்டது. இதுகுறித்த கருத்து கேட்பு கூட்டம், கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி சென்னையில் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக, மினி பஸ்களுக்கு அனுமதிக்கப்படும் துாரத்தை குறைக்க வேண்டும் என்றும், பலரும் வலியுறுத்தினர். அதன் அடிப்படையிலான வரைவு திட்டத்தை, உள்துறை மற்றும் போக்குவரத்து துறை ஆணையரகம் தயாரித்து அரசிடம் அளித்தது.அதை ஏற்று, மினி பஸ்களுக்கான புதிய திட்டத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பெரிய அளவில் மாற்றம் இல்லாமல், ஏற்கனவே கூறப்பட்ட வரைவுகளை பின்பற்றி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.* புதிய திட்டத்தின்படி, 25 கி.மீ., வரை மினி பஸ்கள் இயக்கலாம். இதில், 16.25 கி.மீ., புதிய வழித்தடத்திலும், மீதமுள்ள 8.75 கி.மீ., துாரம், ஏற்கனவே பஸ்கள் செல்லும் வழித்தடங்களிலும் இயக்கலாம்* மினி பஸ்கள் சென்றடையும் இடத்தில் இருந்து, அடுத்த ஒரு கி.மீ., துாரத்திற்குள் பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, கோவில், சந்தைகள் இருந்தால், அதுவரை மினி பஸ்கள் இயக்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதி வழங்கலாம்* சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் மினி பஸ்களை இயக்கலாம்* ஏற்கனவே உள்ள மினி பஸ் உரிமையாளர்கள், தங்களது உரிமங்களை, 'சரண்டர்' செய்து விட்டு, புதிய, 'பர்மிட்' பெறலாம்* பஸ் நிலையங்களில் மினி பஸ்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி, அங்கிருந்து இயக்க அனுமதிக்கப்படும்* மினி பஸ்களுக்கான வழித்தடங்களை, மாவட்ட கலெக்டர்கள் அல்லது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இறுதி செய்வர். பின்னர், அந்த வழித்தடங்களில் தேவையான அளவுக்கு மினி பஸ்கள் இயக்கலாம். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, சென்னை மற்றும் மாவட்ட பகுதிகளில், கூடுதல் மினி பஸ்கள் வசதியை பெற முடியும். அதுபோல், 0 - 2 கி.மீ., 2 ரூபாய், 2 - 4 கி.மீ., 4 ரூபாய், 4 - 6 கி.மீ, 5 ரூபாய், 6 - 8 கி.மீ., 6 ரூபாய், 8 - 10 கி.மீ., 7 ரூபாய், 10 - 12 கி.மீ., 8 ரூபாய், 12 - 18 கி.மீ., வரை 9 ரூபாய், 18 - 20 கி.மீ., 10 ரூபாய் என, புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.இந்த புதிய கட்டணங்கள், வரும் மே 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கட்டணம் மாற்றம்; பயணியர் குழப்பம்

தமிழகத்தில் ஏற்கனவே ஓடும் 2,950 மினி பஸ்களுக்கு, 2000ம் ஆண்டு, குறைந்தபட்ச கட்டணம் 2 கி.மீ., துாரத்திற்கு, 2 ரூபாய் எனவும், 20 கி.மீ., வரை 4.75 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.இதற்கிடையே, டீசல் மற்றும் உதிரிபொருட்கள் விலை உயர்வை காட்டி, மாவட்டங்களில் மினி பஸ்களில் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது, 1 - 10 கி.மீ., துாரத்துக்கு 10 ரூபாய் எனவும், 1 - 20 கி.மீ., துாரத்துக்கு 15 - 18 ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், அரசு அறிவித்துள்ள புதிய கட்டணம், இதை விட குறைவாக இருக்கிறது.சென்னையில் தனியார் மினி பஸ்: சென்னையில் தற்போது, அரசு மினி பஸ்கள் - 165 இயக்கப்படுகின்றன. திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், இப்போது தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான, வழித்தடங்களை உருவாக்கும்போது, முக்கிய பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இருக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S Sivakumar
ஜன 29, 2025 11:00

தெளிவான முறையில் பயண கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். பூனைக்கு மணி கட்டுவது யார்?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 29, 2025 10:26

இதே முடிவை அரசு எடுக்கும்போது இன்றைய ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால் எப்படி கருத்து கூறுவார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன். இப்போது அமைச்சர்களின் உடன் பிற ப்புக்களுக்கும் உறவு முறைகளுக்கும் மினி பஸ் லைசென்ஸ் கொடுக்க இருக்கிறார்கள்.


K.J.Prakash
ஜன 29, 2025 09:36

பத்து ரூபாய்க்கு குறைந்து வாங்குவதில்லை.


visu
ஜன 29, 2025 06:56

எவன் அரசு உத்திரவை மதிக்கிறான்


புதிய வீடியோ