மெட்ரோ ரயிலில் கைவரிசை தனியார் நிறுவன மேலாளர் கைது
சென்னை, : மெட்ரோ ரயிலில், மலேஷியா நாட்டைச் சேர்ந்த பயணியின், 8 சவரன் தங்க வளையல்கள், ஆவணங்கள் அடங்கிய பையை திருடிய, தனியார் நிறுவன மனிதவள மேலாளரை கைது செய்த போலீசார், திருடிய பொருட்களை மீட்டனர். மலேஷியா நாட்டைச் சேர்ந்த யுகேந்திரன், 41, என்பவர், மலேஷியாவில் குடியுரிமை பெற்று, மெடிக்கல் ஏஜன்சி மூலம், தொழில் செய்து வருகிறார். இவர், சென்னையில் உள்ள அவரது உறவினரை பார்ப்பதற்காக, 18ம் தேதி சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் சென்ட்ரல் நோக்கி பயணித்தார். எல்.ஐ.சி., அருகே வந்தபோது, அவரது 8 சவரன் தங்க வளையல்கள், ஆவணங்கள் அடங்கிய பையை, மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து, கடந்த 20ம் தேதி அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசாரின் விசாரணையில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுனில்ராஜ், 31, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், திருடிய நகைகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சுனில்ராஜ், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில், மனித வள மேலாளராக பணிபுரிந்து வருவது விசாரணையில் தெரியவந்தது.