வீடுகளை அகற்ற எதிர்ப்பு கொளத்துாரில் சலசலப்பு
கொளத்துார், கொளத்துார் - ராஜமங்கலம் சந்திப்பில், ராஜிவ்காந்தி நகரில் கொளத்துார் கிராம சர்வே எண் 14 மற்றும் 13/1ஏ கொண்ட ஆறு ஏக்கர் இடத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.இவர்களில் சிலர், பட்டா, மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு பெற்று, பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.இந்த நிலையில், இடத்தின் உரிமையாளரான உசேன் என்பவர், வழக்கு தொடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி மேற்படி இடத்தில் வசிப்போரை அகற்ற திருமங்கலம் கோட்டாட்சியர் சதீஷ், கொளத்துார் தாசில்தார் அபர்ணா தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று குறிப்பிட்ட இடத்தில் வீடுகளை அகற்ற சென்றனர்.இதற்கு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். சிலர் கறுப்பு கொடி காட்டியும், போலி பட்டாக்களை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஏரி உள்வாய் நிலத்திற்கு வழங்கிய போலி பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.இதனிடையே பகுதி மக்களுக்கு ஆதரவாக தி.மு.க., - பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட சில அமைப்பினரும் குவிந்து உசேனுடன் பேச்சு நடத்தினர்.