உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை, புறநகரில் 500 இடங்களை சூழ்ந்த மழைநீர் மருத்துவமனைகள், குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கி பாதிப்பு

சென்னை, புறநகரில் 500 இடங்களை சூழ்ந்த மழைநீர் மருத்துவமனைகள், குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கி பாதிப்பு

சென்னை, வங்கக்கடலில் உருவான 'பெஞ்சல்' புயலின் தாக்கத்தால் நேற்று மாலை வரை சராசரியாக 15 செ.மீ., மழை பெய்தது. நேற்று பெய்த தொடர் கனமழையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், பல இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. அரசு மருத்துவமனைகள், குடியிருப்புகள், தொழிற்சாலைகள் என, 500க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது.எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை தரைதளத்தில் உள்ள புறநோயாளி பிரிவில் மழைநீர் புகுந்தது. மேல்தளத்தில் இருந்து, ஐந்தாவது மாடியில் உள்ள, சுக பிரசவத்திற்கு பிந்தைய வார்டுகளிலும் மழைநீர் புகுந்தது.இதனால், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டோர் அவதிப்பட்டனர். பச்சிளங்குழந்தைகளுடன் இருந்த அவர்களுக்கு, உடனடியாக மாற்று வார்டு ஒதுக்கப்பட்டது.அதேபோல், அருகே உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைகளிலும் மழைநீர் தேங்கியதால், இரண்டு மருத்துவமனைக்கும் வந்த நோயாளிகள், கர்ப்பிணியர், குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். அதேபோல், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைகளில் மழைநீர் தேங்கியதால், அங்கே கட்டப்பட்டு வரும் தாய் - சேய் நல கட்டடத்திற்கு நோயாளிகள் மாற்றப்பட்டனர். அம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளிலும் மழைநீர் புகுந்தது. ஆவடி, பெரவள்ளூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால், ஆவணங்களை பாதுகாக்க முடியாமல் போலீசார் திணறினர்.

மூழ்கிய சாலைகள்

சாலையைவிட தாழ்வாக உள்ளதால், தி.நகர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மழைநீர் தேங்கி, குளம்போல் மாறியது.கே.கே., நகரில் ராஜமன்னார் சாலை, ஆர்.கே., சண்முகம் சாலை, காமராஜர் சாலை; விருகம்பாக்கம், கோடம்பாக்கம், மேற்கு மாம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை மூழ்கடித்து மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. கோயம்பேடு சந்தையிலும், மழைநீர் தேங்கியதால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் அவதிப்பட்டனர். அரும்பாக்கம், தேனாம்பேட்டை கே.பி.தாசன், தி.நகர், அசோக் நகர், கொரட்டூர், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்தது. பட்டாபிராம், தண்டுரை, ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள், கவரப்பாளையம் சாலைகளில் முழங்கால் மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம், பாண்டியன் சாலை மற்றும் கபாலீஸ்வரர் நகரில் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில், சாலை பள்ளமாக உள்ளது. அதில் வெள்ளம் தேங்கியதால், இ.சி.ஆரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மழைநீர் சூழ்ந்ததால், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உருவானது. மழைநீர் தேக்கத்தால், கனரக வாகன போக்குவரத்து மிகுந்த மாதவரம் ரவுண்டானா அருகே, இருபுறமும் வாகனங்கள் தத்தளித்து ஊர்ந்து சென்றன.போரூர் - ஆற்காடு சாலை பரங்கிமலை - பூந்தமல்லி, செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டுச்சாலை சந்திப்பு, காவாங்கரை பகுதியில் ஜி.என்.டி., சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இங்கு, மழைநீர் கால்வாய் புதிதாக கட்டப்பட்ட நிலையில், தண்ணீர் அதிகளவு தேங்கியது.

மின்சப்ளை துண்டிப்பு

மழை காரணமாக, ஆவடி சுற்று வட்டார பகுதிகளில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல்., சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.அடையாறு, சைதாப்பேட்டை, அரும்பாக்கம், ஷெனாய் நகர், எம்.எம்.டி.ஏ., காலனி பிரதான சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, சூளைமேடு, வில்லிவாக்கம் சிட்கோ நகரில் மழைநீர் சூழ்ந்ததால், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், குடியிருப்புவாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.சென்னையின் பல்வேறு பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்கினாலும், உடனுக்குடன் வெளியேற்றப்பட்டது.

மெட்ரோ பணியால் பாதிப்பு

ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலையில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருவதால், சாலை மோசமாகி, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. பள்ளங்களை மழைநீர் மூழ்கடித்ததால், வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கினர்.மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வரும் பெரும்பாலான இடங்களிலும் இதே நிலை இருந்தது. பல இடங்களில் மெட்ரோ பணிக்காக வைக்கப்பட்ட தடுப்புகளால், சாலையை மூழ்கடித்த நீரில் வாகனங்கள் சிக்கின.

சாய்ந்த மரங்கள்

சென்னை மாநகராட்சியில் மட்டும், 400க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கி, கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தவிர, 40க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. அதேபோல், புறநகர் பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகரில், 500க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில், சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி மற்றும் அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி சார்பில் தாழ்வான பகுதிகளில், 1,700 மோட்டர் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல், 103 படகுகள், 329 நிவாரண மையங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், படகு உள்ளிட்டவற்றின் வாயிலாக மக்கள் மீட்கப்பட்டு, அந்தந்த நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மழைநீர் சூழ்ந்த பகுதிகளை, எம்.எல்.ஏ., - எம்.பி., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு செய்து, மழைநீரை விரைவாக வெளியேற்ற வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

'போட்டோ ஷூட்' மக்கள் விரக்தி

சூளை தட்டான்குளம், புளியந்தோப்பு சுற்று வட்டார பகுதியில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி ஆறாக மாறியது. 'அரசியல்வாதிகள் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வருகை தருமாறு, பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.வழக்கம் போல் சாப்பாடு போடுவது, மழைநீரை பார்வையிடுவது போன்ற போட்டோஷூட் எடுக்கலாம்' என, அப்பகுதியினர் விரக்தியுடன் கூறினர்.

கைகொடுக்காத கால்வாய்கள்

பெருங்குடி மண்டலத்தில் பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் மழைநீர் செல்ல ஏதுவாக ரேடியல் சாலையின் இருபுறமும், நீர்வழித்தடம் அமைக்கப்பட்டது. இப்பணிகளால், மடிப்பாக்கம், ராம்நகர், சதாசிவம் நகர், குபரேன் நகர், புழுதிவாக்கம் பகுதியில், கனமழை பெய்தாலும் தண்ணீர் நிற்காது என, மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.ஆனால், ஒருநாள் பெய்த தொடர் மழைக்கே மடிப்பாக்கம், புழதிவாக்கம், உள்ளகரம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பரங்கிமலை - மேடவாக்கம் சாலை, கந்தன்சாவடி, பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் ஆகிய பகுதிகளில், மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது.-வீராங்கால் கால்வாயில் இருந்து தரமணி சாலை வழியாக, பகிங்ஹாம் கால்வாய் வரை, 3.5 கி.மீ., துாரம், 20 அடி அகல மூடு கால்வாய், எட்டு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. பின், ஏழு இடங்களில் கட்டப்பட்ட வடிகால், இந்த மூடு கால்வாயுடன் இணைக்கப்பட்டது. கால்வாயில் அடைப்பு, நீரோட்ட தடை போன்ற காரணத்தால், வீராங்கால் வெள்ளம், பகிங்ஹாம் கால்வாயை அடைவதில்லை. மாறாக ஏழு இடங்களில் அமைத்த வடிகால் வழியாக பின்னோக்கி பாய்கிறது. இதனால், டான்சி நகர், தண்டீஸ்வரன்நகர், அன்னை இந்திரா நகரில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
டிச 01, 2024 11:12

அந்த 4000 கோடிகள் எங்கு சென்றது என்பதை இப்பொழுது சென்னை மக்கள் புரிந்துகொண்டனர் . குடும்ப அமைச்சர்கள் மற்றும் அல்லைக்கை அமைச்சர்கள் கூட்டாக கொள்ளைக்கூடாரமாக சென்னையில் 4000 கோடிகளை பகிர்ந்து கொள்ளை .வடிகால் பணிகளில் ஒன்றும் செய்யவில்லையென்பது சென்னை மக்களுக்கு இப்பொழுது தெரிந்துவிட்டது . அண்ணாமலையின் DMK பைல்கள் அனைத்தையும் புரட்டிப்பார்க்கும் நேரம்வந்துவிட்டது


முக்கிய வீடியோ