ராமதாஸ் ஆலோசனையை ஏற்க வேண்டியதில்லை
சென்னை: ''பா.ம.க., கட்சி விதிகளின்படி, நிறுவனர் ராமதாஸ் ஆலோசனைகளை, பொதுக்குழு ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை,'' என, அன்புமணி ஆதரவாளரான, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலு தெரிவித்தார். அவரது பேட்டி: ஆகஸ்ட் 17ல், ராமதாஸ் கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டம் என யார் பெயரும், கையொப்பமும் இல்லாமல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பா.ம.க., விதிகளுக்கு எதிரானது. பொதுக்குழுவுக்கான அறிவிப்பை, பொதுச்செயலர்தான் வெளியிட வேண்டும். மாநில அலவிலான பொதுக்குழு, செயற்குழு, நிர்வாகக்குழு ஆகியவற்றுக்கு தலைமை தாங்கும் அதிகாரம், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணிக்கே உள்ளது. விதி 13ன்படி, மாநில அளவிலான பொதுக்குழு போன்ற கூட்டங்களுக்கு, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைக்கப்பட்டு, அவரது வழிகாட்டுதலின்படி, முடிவுகள் எடுக்க வேண்டும். அதன்படியே பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. நிறுவனரின் ஆலோசனைகளை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். கண்டிப்பாக பின்பற்ற வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.