மேம்பாலத்தில் போஸ்டர் ஒட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆவடி: பட்டாபிராமில், திறக்கப்படாத மேம்பாலத்தில், தொடர்ந்து போஸ்டர் ஒட்டுவதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது அபராதம் விதித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது. சென்னை - திருவள்ளூரை இணைக்கும் வகையில், பட்டாபிராமில் எல்.சி., கேட் - 2 என்ற ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இங்கு, 45 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்வே கேட் மூடப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கடவுப்பாதையில், 78.31 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. மேம்பாலத்தில் ஒரு வழிப்பாதை பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டில் உள்ளது. தற்போது, மீதமுள்ள ரயில்வே பணிகள், 8 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகின்றன. மேம்பாலத்தில் செல்லும் போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்தில் சிக்காமல் இருக்க, 'நோட்டீஸ் ஒட்டாதீர்' என அறிவிப்பு எழுதி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிலர், சுய விளம்பரம் தேடிக்கொள்ள, வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறச் செய்யும் வகையில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். ஒவ்வொரு முறையும் நெடுஞ்சாலைத்துறை அகற்றினாலும், தொடர்ந்து போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அங்கு நோட்டீஸ் ஒட்டுவோருக்கு அபராதம் விதித்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.