பெருங்களத்துார்: தாம்பரம் சட்டசபை தொகுதியில் அடங்கிய பெருங்களத்துார் - பீர்க்கன்காரணையில், பெரும்பாலானோருக்கு கணக்கீட்டு படிவம் வழங்கப்படவில்லை என, குடியிருப்போர் நலச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்து வருகிறது. இதற்காக, வீடு வீடாக கணக்கீட்டு படிவம் வழங்கி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெற வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், தாம்பரம் தொகுதியில், 427 ஓட்டுச்சாவடி அலுவலர்களால், 4.15 லட்சம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை பகுதிகளில், பெரும்பாலானோருக்கு இன்னும் படிவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பி.மகேந்திரபூபதி கூறியதாவது: பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை பகுதிகளில், இன்னும் பாதி பேருக்கு கணக்கீட்டு படிவம் வழங்கப்படவில்லை. வழங்கிய படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க சென்றால், இதை குறிப்பிடவில்லை, அதை குறிப்பிடவில்லை என்று கூறி, படிவத்தை வாங்காமல் அலைக்கழிக்கின்றனர். வாக்குச்சாவடி அலுவலர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. வாக்காளர்களுக்கு உதவும் அதிகாரிகளுக்கு, எதுவுமே தெரியவில்லை. அதே நேரத்தில், தி.மு.க.,வுக்கு ஓட்டு போடும் நபர்களுக்கு மட்டும், எந்த பாதிப்பும் இல்லாமல், படிவங்களை கொடுத்து பூர்த்தி செய்து வாங்குகின்றனர். மற்றவர்களை வேண்டும் என்றே புறக்கணிக்கின்றனர். தேர்தல் அதிகாரிகள், இப்பகுதிகளை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.