ஆவடி: ஆவடியில், நில மோசடி, ஆன்லைன் பங்குச்சந்தை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சைபர் கிரைம் புகாரில் மீட்கப்பட்ட, 5.97 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், உரியவர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன. ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், பங்குச்சந்தை, பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பான ஆன்லைன் மோசடி புகார்கள் மீது, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்., 15ம் தேதி முதல், நவ., 18ம் தேதி வரை, 36 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மோசடி நபர்களின் வங்கி கணக்கில் இருந்து, 1.06 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டது. அதேபோல், நில மோசடி, ஆவண மோசடி, வேலை வாய்ப்பு மோசடி தொடர்பான நான்கு வழக்குகளில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 4.90 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், ரொக்கப் பணம் ஆகியவை மீட்கப்பட்டன. பின், நீதிமன்ற ஆணை பெற்று, அவற்றை கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி உரியவர்களிடம் நேற்று வழங்கினார்.