பைக் மோதி அரசு ஊழியர் இறப்பு மனைவிக்கு ரூ.62 லட்சம் இழப்பீடு
சென்னை,எழிலகம் அருகே, இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்த அரசு ஊழியரின் மனைவிக்கு, 'ரிலையன்ஸ் ஜெனரல்' காப்பீடு நிறுவனம் 62.35 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. திருவல்லிக்கேணி, கபாலி நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ், 48. சேப்பாக்கத்தில் உள்ள மாநில திட்டக்குழு அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்தார். கடந்த 2023 அக்., 21ல், காமராஜர் சாலையில் உள்ள எழிலகம் அருகே, இருசக்கர வாகனத்தில் தன் மனைவி மோகனாவுடன் சென்ற போது, அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், தங்கராஜ் உயிரிழந்தார். இதையடுத்து, 95 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, தங்கராஜ் மனைவி மோகனா, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி நசிர் அகமது முன் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ''எதிரே வந்த இருசக்கர வாகன ஓட்டுநரின் அஜாக்கிரதையும், அதிவேகமாக ஓட்டியதுமே மனுதாரரின் கணவர் விபத்தில் சிக்க காரணம். எனவே மனுதாரருக்கு, ரிலையன்ஸ் ஜெனரல் காப்பீடு நிறுவனம் இழப்பீடாக 62.35 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.