உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதியம் வரை குப்பை சேகரிப்பு பணி துவண்டு போகும் துாய்மை பணியாளர்கள்

மதியம் வரை குப்பை சேகரிப்பு பணி துவண்டு போகும் துாய்மை பணியாளர்கள்

திருவொற்றியூர், வெயில் காலம் துவங்கிய நிலையில், மதியம் வரை வீடுகளில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடுவதால், துாய்மை பணியாளர்கள் துவண்டு போய் விடுகின்றனர்.சென்னை, திருவொற்றியூர் மண்டலத்தில், 14வார்டுகள் உள்ளன. இங்கு 1,506 தெருக்களில், 87,418 வீடுகளில், 3.83 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.இம்மண்டலத்தில் தினமும், 175 டன் மக்கும், மக்காத மற்றும் அபாயகரமான குப்பை சேகரமாகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை, சென்னை மாநகராட்சியே துாய்மை பணியை மேற்கொண்டது.அப்போது, போதுமான ஊழியர்கள், குப்பைத் தொட்டிகள், தரம் பிரித்தல், உரம் தயாரித்தல், மறு சுழற்சி செய்தல் போன்ற பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. பின்னர், தனியார் ஒப்பந்த நிறுவனமாக, ராம்கியிடம் துாய்மை பணி கைமாறியது. ஆனால், ஊழியர்களின் எண்ணிக்கை, மூன்றில் ஒரு பங்காக குறைந்தது. இதன் காரணமாக, ஒரு துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரித்த வீடுகளின் எண்ணிக்கை, மூன்று மடங்காக உயர்ந்து விட்டது. வேலைக்கு செல்பவர்கள் குப்பையை பிரிப்பதில்லை. வேறு வழியின்றி, துாய்மை பணியாளர்களே பிரிக்க வேண்டியிருப்பதால், நேரம் கடந்து விடுகிறது. விளைவு, மதியம் வரை வீடுகளில் குப்பையை சேகரிக்க வேண்டியுள்ளது.இதன் காரணமாக, 11:00 மணிக்கு மேல் குப்பை சேகரிப்பில் ஈடுபடும் துாய்மை பணியாளர்கள், குறிப்பாக பெண் துாய்மை பணியாளர்கள், கடுமையாக சோர்ந்து விடுகின்றனர். உடலளவிலும் கடுமையாக பாதிக்க நேரிடுகிறது. குப்பைத் தொட்டிகளும் அகற்றப்பட்டு விட்டதால், நிலைமை படுமோசமாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, காலை 10:00 மணி வரை, துாய்மை பணியாளரை எதிர்பார்க்கும் குடியிருப்புவாசிகள், வேலைக்கு செல்லும் மும்முரத்தில், மூட்டையாகக் கட்டி ரயில்வே தண்டவாளம், ஆள் நடமாட்டம் இல்லாத இடம், குப்பைத் தொட்டி இருந்த இடங்களில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். விளைவு, கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அசுத்தமான சூழல் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட தனியார், துாய்மை பணி ஒப்பந்த நிறுவனம் கவனித்து, தேவைக்கு ஏற்ப ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, காலை 10:00 மணிக்குள் வீடுகளில் குப்பை சேகரிப்பு பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, துாய்மை பணியாளர்களுக்கு, வெயிலை எதிர்கொள்ள வேண்டிய வகையில், குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்க வேண்டும்.இல்லாவிட்டால், சிங்காரச் சென்னை குப்பை மேடாகி விடும் என, சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி