உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தாட்கோ நிதியில் விளையாட்டு அரங்கம் எஸ்.சி., - எஸ்.டி., சங்கங்கள் ஆவேசம்

 தாட்கோ நிதியில் விளையாட்டு அரங்கம் எஸ்.சி., - எஸ்.டி., சங்கங்கள் ஆவேசம்

சென்னை: 'தாட்கோ' எனும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக நிதியில், கண்ணகி நகரில் கபடி உள்விளையாட் டு அரங்கம் அமைக்கும் பணிக்கு, எஸ்.சி., - எஸ்.டி., சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. கண்ணகி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில், 'தாட்கோ' நிதி 75 லட்சம் ரூபாயில் கபடி உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. பார்வையாளர் மடம், உடற்பயிற்சி கூடம், பயிற்சியாளர் அறை மற்றும் இரண்டு ஆடுகளம் உள்ளிட்டவை, நவீன முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், இது போன்ற பணிகளை மேற்கொள்ளாமல், மத்திய அரசின் சிறப்பு உட்கூறு திட்ட நிதியை, தாட்கோ வழியே பிற திட்டங்களுக்கு தமிழக அரசு பயன்படுத்துவதாக, எஸ்.சி., - எஸ்.டி., சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. தலித் விடுதலை இயக்கத்தினர் கூறுகையில், 'தாட்கோ வழியே மேற்கொள்ளப்பட வேண்டிய ஏராளமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றை மேற்கொள்ள அதிகாரிகளும், அரசும் முன்வரவில்லை. மாறாக, மைதானம் அமைப்பது போன்ற இதர திட்டங்களுக்கு, எஸ்.சி., - எஸ்.டி., மக்களின் சமூக மேம்பாட்டு நிதியை அரசு பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது' என்றனர். அம்பேத்கர் மக்கள் கழகத்தினர் கூறுகையில், 'மத்திய அரசு, பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக ஒது க்கும் நிதியை, தமிழக அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புவதும், பிற திட்டங்களுக்கு மடை மாற்றுவதும் அதிகரித்துள்ளது. இது போன்ற செயல், அச்சமூக மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கச்செய்யும்' என்றனர். தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், தொல்குடி உட்பட பல்வேறு திட்டங்களில் ஒதுக்கப்படும் நிதி, பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் நலனிற்கு அரசு பயன்படுத்தப்படாமல், வேறு திட்டங்களுக்கு மாற்றப்படுவதை நிறுத்த வேண்டும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ