திருமங்கலம், பள்ளி அருகில், சாலையோரத்தில் உள்ள பட்டுபோன ராட்சத மரத்தால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பீதியில் உள்ளனர்.அண்ணா நகர் மண்டலம், 104வது வார்டு, திருமங்கலத்தில், பள்ளி சாலை உள்ளது.இதன் அருகில் கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு வாசல் என, நான்கு தெருக்கள் உள்ளன. இப்பகுதியில், தனியார் பள்ளி, திருமங்கலம் காவல் நிலையம் உட்பட, பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.இதில், கிழக்கு வாசல் பகுதியில் சாலையோரத்தில், பட்டுபோன ராட்சத மரம் ஒன்று உள்ளது. இது, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது.இவ்வழியாக தினமும், பொதுமக்கள் மட்டுமின்றி, நுாற்றுக்கணக்கான மாணவ - மாணவியர் சென்று வருகின்றனர்.எனவே, விபத்து அபாயத்தில் உள்ள இந்த மரத்தை, வெட்டி அகற்ற வேண்டும். இதுகுறித்து மாநகராட்சி, முதல்வர் தனிப்பிரிவு அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும், அலட்சியமாக உள்ளனர். உயிர்பலி, வீடுகளுக்கு சேதம் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.