சென்னை, சென்னை, அண்ணா சாலையில் மின் வளாகம் உள்ளது. அங்கு, மின் வாரிய தலைமை அலுவலகம், மின் தொடரமைப்பு கழக அலுவலகம் உள்ளிட்டவை செயல்படுகின்றன.மின் வாரியம், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தற்போது, மின் தொடரமைப்பு கழக கட்டடத்தில், சோதனை முறையில் நவீன தானியங்கி அசைவு கண்டறியும், 'சென்சார்' கருவி, 12 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.அந்த கருவி வாயிலாக, அலுவலகத்தில் ஊழியர் இல்லாத சமயங்களில் ஒளிரும் மின் விளக்குகள் தானாகவே அணைக்கப்பட்டுவிடும். ஆள்நடமாட்டம் இருக்கும் போது, மீண்டும் தானாகவே மின் விளக்குகள் ஒளிரும்.இது தவிர, ஒரு அரங்கம், மூன்று கூட்ட அறைகளில், கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கருவி உதவியுடன் ஆள் இல்லாத சமயங்களில், 'ஏசி' சாதன இயக்கமும் துண்டிக்கப்பட்டுவிடும். இதன் வாயிலாக தினமும், 500 யூனிட் மின்சாரம் மிச்சப்படுத்தப்படும்.இதனால் ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாய் மின் கட்டண செலவு குறையும். இந்த கட்டடத்தில், தினசரி மின் பயன்பாடு, 6,053 யூனிட் என, மின் வாரியம் விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.