வில்லிவாக்கம்:வில்லிவாக்கம் பேருந்து நிலையம் மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளதால், பயணியர் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.சென்னை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.அண்ணா நகர் மண்டலத்தில் தொடர்ந்து, மாடுகள் உலா வருவது அதிகரித்துள்ளது. அதிகாரிகள் பலமுறை பிடித்து அபராதம் விதித்தும், மாட்டின் உரிமையாளர்கள் மீண்டும் மீண்டும் அலட்சியமாக செயல்படுகின்றனர்.குறிப்பாக, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளன.இதனால், சாணம் உள்ளிட்ட கழிவுகளால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி, பேருந்து நிலையத்தில் உலா வரும் மாடுகள், அச்சுறுத்தும் வகையில் சுற்றுவதால், பயணியர் அங்கும் இங்குமாக பயந்து ஓடுகின்றனர். பிரதான சாலையில் எப்போதும் வாகனங்கள் செல்லும் நிலையில், பயணியர் தவறி கீழே விழுந்தால், உயிர் பலி ஏற்படவும் வாய்ப்புள்ளது.இதுகுறித்து பயணியர் கூறியதாவது:வில்லிவாக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சிலர், 50க்கும் மேற்பட்ட கறவை மாடுகளை வளர்க்கின்றனர். இந்த மாடுகளை, பேருந்து நிலையத்திலேயே கட்டி வைக்கின்றனர். இதனால், பயணியர் மட்டுமின்றி, பேருந்துகளை நிறுத்த முடியாமல் ஊழியர்களும் சிமரப்படுகின்றனர்.அதேபோல், பயணியரை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறாகவும், சாலையை ஆக்கிரமித்து மாடுகளை கட்டி வைக்கின்றனர். அவற்றுக்கு தீவனம் வைப்பது, பால் கறப்பது என அனைத்து வேலையும், அங்கேயே நடக்கின்றன.இதனால், அப்பகுதியைச் கடந்து செல்வோர், அச்சத்தால் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். மாடுகளின் சாணம், சிறுநீர் கழிவுகளால் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. அதேபோல், பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொலை மிரட்டல்
மாநகர பேருந்து ஓட்டுனர்கள் கூறியதாவது:பேருந்து நிலையத்தில், அத்துமீறி மாடுகளை கட்டி வைத்து, தொழுவமாக மாற்றியுள்ளனர். பேருந்துகள் திரும்புவதற்கு கஷ்டமாக உள்ளது. இதுகுறித்து கேள்வி கேட்டால், மாட்டின் உரிமையாளர்கள் கொலை மிரட்டல் விடுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளை கண்ட உடன் மாடுகளுடன் ஓட்டம் பிடிக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.