| ADDED : பிப் 21, 2024 02:27 AM
செம்மஞ்சேரி:சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள, செம்மஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையம், 24 மணி நேரமும் செயல்படுகிறது.தினமும், 300 முதல் 350 பேர் சிகிச்சை பெறுகின்றனர். பரிசோதனை கூடம், கர்ப்பிணியர் பரிசோதனை, கண், பல் சிகிச்சை பிரிவு உள்ளது.இந்நிலையில், கடந்த ஆண்டு செப்., மாதம், 1.20 கோடி ரூபாயில் 'டயாலிசிஸ்' மையம் துவங்கப்பட்டது. மக்களிடம் அமோக வரவேற்று பெற்றுள்ளது.மருத்துவமனை தேவைக்காக ஜெனரேட்டர் வைக்கப்பட்டு உள்ளது. இதன் நான்கு பேட்டரிகள் திருடப்பட்டுள்ளதால், மின் தடையின்போது ஜெனரேட்டரை இயக்க முடியாமல், மருத்துவமனை இருளில் மூழ்குகிறது. மேலும், 24 மணி நேரம் மின்சாரத்தில் செயல்படும் குளிரூட்டி இயந்திரம் செயல்படாமல் இருப்பதால், மருந்து பொருட்களை பாதுகாக்க முடியாமல், ஊழியர்கள் திணறுகின்றனர்.டயாலிசிஸ் மையத்தில், சிகிச்சையின் போது மின்சாரம் தடைப்பட்டால், முழுமையாக சிகிச்சை பெறாத சூழல் நிலவுகிறது. மருத்துவமனை வளாகத்தில் இருந்து, 'ஏசி' உள்ளிட்ட மின்சாதன பொருட்கள், ஏற்கனவே திருடப்பட்டு உள்ளன.இரவு காவலாளி நியமித்தால், தொடர் திருட்டை தடுக்க முடியும். இதற்கு, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழியர்கள் கூறினர்.