திருப்பதி மட்டுமின்றி பல்வேறு சுற்றுலா தலங்கள், கோவில்களுக்கு சென்னையில் இருந்து சுற்றுலா துறை சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இதில், திருப்பதி யாத்திரை செல்லும் பக்தர்களை ஏமாற்றி, சுற்றுலா துறை ஊழியர் கல்லா கட்டுவதுடன், அவர்களுக்கென வழங்கப்படும் பொருட்களையும் தராமல் சுருட்டி கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இது குறித்து, இரு தினங்களுக்கு முன் பயணித்த பயணியர் கூறியதாவது:தமிழக சுற்றுலா துறை சார்பில் திருப்பதி செல்ல, பெரியவர்களுக்கு 2,300 ரூபாய்; சிறியவர்களுக்கு, 2,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.வசூலிக்கப்படும் பணத்திற்கு, திருப்பதி, திருச்சானுார் கோவில்களுக்கும், மூன்று வேளை உணவு, 1 லிட்டர் குடிநீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட், இரண்டு லட்டுகள், ஆங்கில நாளிதழ், சிறிய அளவிலான கை பை ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஆனால், பேருந்து பயண துவக்கத்தின்போது, சிலருக்கு மட்டும் 500 மி.லிட்டர் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன; அவையும் அனைவருக்கும் தரப்படவில்லை. 38 பேர் பயணித்த நிலையில், மூன்று பேருக்கு மட்டுமே நாளிதழ்கள் வழங்கப்பட்டன.இரண்டு லட்டுக்கு பதிலாக ஒரு லட்டு மட்டுமே வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கென தரிசன விரைவு டிக்கெட் கொடுக்கப்படவில்லை. முடி காணிக்கை செலுத்த அழைத்துச் சென்றபோது சுற்றுலா துறை ஊழியர், 200 ரூபாய் டோக்கனுக்கு தனியாக பணம் வசூலித்தார்.திருப்பதியில் சுவாமி தரிசனம் முடித்து கீழே இறங்க சற்று நேரம் ஆனதால், திருச்சானுார் அழைத்துச் செல்லவில்லை. அப்படியே அழைத்துச் செல்ல வேண்டுமென்றால், ஒருவர் தலா, 200 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றனர்.இப்படி, தமிழக அரசு சுற்றுலா துறையிலேயே ஊழியர்கள் கல்லா கட்டி வருகின்றனர். சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து சுற்றுலா துறை ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை. சுற்றுலா துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டாலும், போன் எடுக்க ஆளில்லை.-- நமது நிருபர் -