தற்காலிக கொடி கம்பம் வழிகாட்டுதல் வெளியீடு
சென்னை: சென்னை மாநகராட்சியில் தற்காலிக கொடி கம்பம் நட, ஏழு நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என, வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய சிலைகள், கொடி கம்பங்களை நிறவுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி கமிஷனர் தலைமையில் மாவட்ட குழுவில், போலீஸ் கூடுதல் கமிஷனர் உட்பட ஆறு பேர் உள்ளனர். கோட்டாட்சியர் தலைமையில் எட்டு பேர் கொண்ட துணை குழு அமைக்கப்பட்டுள்ளது. தனிநபர், கட்சிகள், சங்க நிகழ்ச்சிகளில் தற்காலிக கொடி கம்பம் நிறுவ, ஏழு நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தற்காலிக கம்பம், மூன்று நாட்களுக்கு அனுமதிக்கப்படும். தார்ச்சாலை மேற்பரப்பில் அமைக்கக்கூடாது; மண் பரப்பில் அமைக்க வேண்டும். சாலை மையத்தடுப்பு, நடைபாதை, மழைநீர் வடிகால்வாய், பாலங்கள் மற்றும் சுவர்களில் அனுமதிக்கப்படாது. கம்பத்தின் உயரம், 3.5 மீட்டராக இருக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், விண்ணப்பித்தவரே பொறுப்பேற்க வேண்டும். அதற்கான இழப்பையும் அவரே வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட 14 விதமான வழிகாட்டுதல் கொண்ட அறிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.