உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தட்டாங்குளம் மக்கள் தாசில்தாரிடம் மனு

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தட்டாங்குளம் மக்கள் தாசில்தாரிடம் மனு

சென்னை: 'சூளை தட்டாங்குளம் பகுதியை கோவிலுக்கு சொந்தமான இடமாக மாற்றக்கூடாது; அங்கு, ஐந்து தலைமுறைகளாக வசிக்கும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்' எனக்கோரி, புரசைவாக்கம் தாசில்தாரிடம், அப்பகுதி மக்கள் நேற்று மனு அளித்தனர். சூளை தட்டாங்குளத்தில், சூளை அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோவிலை சுற்றி, காட்டூர் நல்லமுத்து தெரு, ஆச்சாரி தெரு, சந்தியாப்பா தெரு, ருத்ரபா தெரு உள்ளிட்ட பல தெருக்கள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நேற்று, புரசைவாக்கம் தாசில்தார் அலுவலகத்தில், வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்தனர். பொதுமக்களை ஒருங்கிணைந்து பாரத் இந்து முன்னணி மாநில தலைவர் ஆர்.டி.பிரபு கூறியதாவது: சூளை தட்டாங்குளம் பகுதியில் உள்ளவர்கள் குழு அமைத்து வசூலித்து, கோவில் திருப்பணிகளை செய்து வந்தனர். நாளடைவில் அதையே கோவில் நிர்வாகம், இவர்கள் குடியிருப்பு பகுதியை மாத வாடகைக்கு மாற்றியதோடு, தட்டாங்குளம் பகுதி கோவிலுக்கு சொந்தம் என, உரிமை கோரி வருகிறது. கோவிலுக்கு தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த யாரும் பத்திரம் எழுதி தரவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கேட்கப்பட்ட கேள்விக்கும், தட்டாங்குளம் பகுதி கோவிலுக்கு சொந்தமில்லை என்பது தெளிவாக உள்ளது. ஆகையால், ஐந்து தலைமுறைக்கும் மேலாக இங்கு வசிக்கும் மக்களுக்கு, அரசு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை