வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதாவது நாளை முதல் ஆட்டை படலம் துவங்கும்
மேலும் செய்திகள்
அபாய விளம்பர பேனர்கள் கணக்கெடுக்கிறது மாநகராட்சி
10-Aug-2024
சென்னையில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற உத்தரவிட்டு, மாநகராட்சி வழங்கிய கால அவகாசம் முடிவடைந்தது. நாளை முதல், விதிமீறல் விளம்பர பேனர்களை, மாநகராட்சி பணியாளர்களே அகற்றும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், விதிமீறிய கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், மாநகராட்சி எச்சரித்துள்ளது.சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பகுதிகளில், மாநகராட்சி, காவல் துறையின் தடையில்லா சான்று பெற்று, 200க்கும் மேற்பட்ட விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 800க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நடவடிக்கை
அதேநேரம், அனுமதி பெறாமல், விதிகளை மீறி குடியிருப்பு கட்டடங்கள், வணிக கட்டடங்கள், அரசு மற்றும் தனியார் இடங்கள் என, பல்வேறு பகுதிகளில் புற்றீசல் போல் விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பல குடியிருப்பு கட்டடங்களில், கட்டடத்தின் உறுதி தன்மை போன்றவற்றை ஆராயாமல், விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன. விளம்பர நிறுவனத்திடம் இருந்து மாத வாடகை அடிப்படையில் பணம் வருகிறது என்பதற்காக, 500 கிலோவிற்கு மேற்பட்ட இரும்பு கம்பிகளை சாரம் அடித்து, விளம்பர பேனர்கள் அமைக்க கட்டட உரிமையாளர்களும் அனுமதிக்கின்றனர்.இது போன்ற விளம்பர பேனர்களால் அதீத மழை, புயல் உள்ளிட்ட பேரிடர்காலங்களில் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டள்ளது. சமீபத்தில் மும்பையில், சூறாவளி காற்றில் ராட்சத விளம்பர பேனர் சரிந்து, 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.அதேபோல், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளம்பர பேனர்கள் விழுந்ததில், அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயின.இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பதாகைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது தொடர்பாக கால கெடு விதித்து, விளம்பர நிறுவனங்கள், கட்டட உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரித்து இருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாவது:நீதிமன்ற வழக்கு தொடர்புடைய மற்றும் அனுமதி பெற்ற விளம்பர பேனர்கள் தவிர, அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள், கட்டட உரிமையாளர்கள் மூன்று நாட்களுக்குள் கட்டுமானத்துடன் அகற்ற வேண்டும்.மேலும், வணிக நிறுவனங்கள் தங்களது கடையின் பெயர் பலகையை, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் - 2023 பிரிவு 327ல் தெரிவித்துள்ள படி நிறுவி இருந்தால், உரிமம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.அதேநேரம், ஒரு பெயர் பலகைக்கு மேல் வைக்க வேண்டும் என்றால், முறையாக அனுமதி பெற்றபின் தான் வைக்க வேண்டும். எச்சரிக்கை
கூடுதலாக பெயர் பலகை வைத்துள்ள விளம்பர நிறுவனங்கள், மூன்று நாட்களுக்குள் அகற்ற வேண்டும்.விளம்பர நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் விதிகளுக்கு மாறாக வைத்துள்ள விளம்பர பலகைகளை அகற்றாதபட்சத்தில், அபராதம் விதிப்பதுடன், விளம்பர பலகை மற்றும் அதன் கட்டுமானம் அகற்றப்படும்.சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதும் போலீசில் வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு சென்னை மாநகராட்சி எச்சரித்து இருந்தது.இதன்படி, மாநகராட்சி வழங்கிய கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், நாளை முதல் அனுமதி இல்லாத விளம்பர பேனர்கள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்படும் என, மாநகராட்சி எச்சரித்து உள்ளது. அதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.அகற்றும் கட்டணம் வசூல்மண்டல வாரியாக, அனுமதி பெறாத விளம்பர பேனர்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு உள்ளது. விதிமீறிய விளம்பர பேனர்கள் அகற்றுவதற்கு, மாநகராட்சி பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது. எனவே, விளம்பர பேனர்கள் அகற்றி, அதற்கான செலவை உரிமையாளர்களிடமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து, விதிமீறும் கட்டட உரிமையாளர், விளம்பர நிறுவனத்தினர் மீதான அபராத தொகை, பலமடங்கு அதிகரித்து வசூலிக்கப்படும்.- ஜெ.குமரகுருபரன்,கமிஷனர், சென்னை மாநகராட்சி- நமது நிருபர் -
அதாவது நாளை முதல் ஆட்டை படலம் துவங்கும்
10-Aug-2024