குண்டும் குழியுமான மூவரசம்பட்டு சாலை
மூவரசம்பட்டு: போக்குவரத்து நிறைந்த மூவரசம்பட்டு பிரதான சாலையில், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சென்னை மாநகராட்சிக்கும், தாம்பரம் மாநகராட்சிக்கும் நடுவே உள்ளது மூவரசம்பட்டு ஊராட்சி. தினமும், நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப இச்சாலை தரமானதாக அமைக்கப்படுவதில்லை. ஒவ்வொரு முறை சீரமைத்தாலும், அடுத்த சில மாதங்களில் குண்டும் குழியுமாக, போக்குவரத்திற்கு லாயக்கற்று மாறிவிடுகிறது. இந்நிலையில், 'டிட்வா' புயல் மழையால், இச்சாலையில் வெள்ளம் தேங்கியது. தற்போது தண்ணீர் வடிந்துள்ள நிலையில், சாலை மேலும் மோசமான நிலையில் உள்ளது. வாகன போக்குவரத்திற்கு ஏற்ற வகையில், சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.