உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  காக்கா ஆழியை அகற்ற ரூ.90 கோடி திட்டம் அனுமதி வரவில்லை என்கிறது ஆணையம்

 காக்கா ஆழியை அகற்ற ரூ.90 கோடி திட்டம் அனுமதி வரவில்லை என்கிறது ஆணையம்

சென்னை: 'காக்கா ஆழி'யை அகற்றும், 90 கோடி ரூபாயிலான திட்டத்திற்கு, தமிழக அரசின் அனுமதி கிடைக்கவில்லை என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், தமிழ்நாடு மாநில சதுப்பு நில ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சென்னையை சேர்ந்த குமரேசன் சூளுரன் என்பவர், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் அளித்த மனு: எண்ணுார் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கடலில் தென் அமெரிக்க மஸ்ஸல் எனப்படும், 'காக்கா ஆழி'கள் அதிகம் பரவியுள்ளன. இவை வெளியிடும் துர்நாற்றம் உடைய கசடுகளால் இறால், மீன் உள்ளிட்ட கடல் உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், பழவேற்காடு ஏரி போன்ற உப்பங்கழிகளை நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, அவற்றை அழிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த தீர்ப்பாயம், 'பருவமழை துவங்கும்முன் காக்கா ஆழியை அகற்றும் பணிகளை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, மாநில சதுப்பு நில ஆணையம் மற்றும் நீர்வளத்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி, மாநில சதுப்பு நில ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை: எண்ணுார் சிற்றோடையில் இருந்து காக்கா ஆழியை அகற்ற, 90 கோடி ரூபாயிலான திட்டத்தை, நீர்வளத்துறை தயாரித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என, நீர்வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலருக்கு, தமிழக சதுப்பு நிலை ஆணையம் சார்பில், கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. காக்கா ஆழியை அகற்றும், 90 கோடி ரூபாய் திட்டத்திற்கு விரைவில் அனுமதி பெற, மாநில சதுப்பு நில ஆணையம் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே, தீர்ப்பாய உத்தரவுப்படி, காக்கா ஆழியை அகற்ற, நீர்நிலைகளை துார்வாரும் பணிகள் தாமதமின்றி துவங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி