பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.33 கோடியில் புதிய வளாகம் ரூ.33 கோடியில் மாநகராட்சி அமைக்கிறது
சென்னை மாநகராட்சி தெற்கு வ ட்டாரத்தில், ஐந்து மண்டலங்கள் உள்ளன. இதன் மைய பகுதியில் அலுவலகத்தை மாற்ற, மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி, பல ஆண்டுகளாக நடந்தது . இந்நிலையில், கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம் அருகில், ஏற்கனவே செயல்பட்ட ஆலந்துார் மண்டல அலுவலகத்தை ஒட்டி, ஒரு ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம், 33 கோடி ரூபாயில், ஐந்து அடுக்கு கட்டடமாக கட்டப்படுகிறது. இதில், தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகம், தெற்கு வட்டார பேரிடர் மேலாண்மை துறை அலுவலகம் மற்றும் ஆலந்துார் மண்டல அலுவலகம் ஆகியவை அமைகின்றன. பேரிடர் மேலாண்மை துறை அலுவலகம், எழிலகம் கட்டடத்தில் செயல்படுகிறது. பருவமழையின் போது, தென் சென்னை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுவதால், மீட்பு பணியில் பேரிடர் மேலாண்மை துறையின் பங்கு மிக முக்கியம். இதனால், தெற்கு வட்டார அலுவலகம் கிண்டியில் உருவாக்கப்படுகிறது. இங்கு, பைபர் படகு நிறுத்தம், பேரிடர் பயிற்சி கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டடம் வடிவமைக்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில் பணிக்காக, ஆலந்துார் மண்டல அலுவலகம் கையகப்படுத்தப்பட்டது. மாற்றாக, கிண்டி சிட்கோ வளாகத்தில், மாதம் 20 லட்சம் ரூபாய் வாடகை கட்டடத்தில், மண்டல அலுவலகம் செயல்படுகிறது. இதற்கான நிதியை, மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்குகிறது. புதிய கட்டடம் கட்டுவதற்கான 33 கோடி ரூபாயில், பேரிடர் மேலாண்மை துறை 12 கோடி ரூபாய்; ஆலந்துார் மண்டல அலுவலக இடத்திற்கு இழப்பீடாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கும், 7 கோடி ரூபாய் மற்றும் சென்னை மாநகராட்சி 14 கோடி ரூபாய் வழங்குகின்றன. இதற்கான கோப்புகள், அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றன. புதிய கட்டடம் கட்ட தேர்வான இடத்தில், மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. அப்பணி முடிந்ததும் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.