விதிகளின்படி சிறை நிர்வாகம் செயல்படுவதாக அரசு தகவல்
சென்னை, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, விசாரணை கைதியான பக்ருதீன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'கைதிகளுக்காக இயங்கி வந்த கேன்டீன், கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டு விட்டது. கேன்டீன் தொடர்ந்து இயங்கும் வகையில், அதை திறக்க உத்தரவிட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அம்பத்துார் நீதிமன்ற நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.மாலா அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, புழல் சிறை கேன்டீன் திறந்திருப்பதாக, அம்பத்துார் கோர்ட் நீதிபதி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிகள்படி சிறை நிர்வாகம் செயல்படுவதாக தெரிவித்தார்.இதையடுத்து, சிறை விதிகள் படி, புழல் கேண்டீன் பராமரிக்கப்படுகிறது; எதிர்காலத்திலும் இதேபோல பராமரிக்கப்படும் என, சிறைத்துறை டி.ஐ.ஜி., மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.