பெயருக்கு வடிகால் அமைப்பு சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி
சென்னை, ஆழ்வார்பேட்டையில், சாலையில் தேங்கும் மழைநீர் வடிய போதிய அளவில் வடிகால் அமைக்காமல், பெயருக்காக அமைக்கப்பட்டு வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.சென்னை மாநகராட்சி பகுதிகளில், 3,000 கி.மீ., மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைநீர் வடிகாலை புனரமைப்பது, துார் வாருவது, அகலப்படுத்துவது போன்ற பணிகளை, மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை சேஷாத்ரி சாலையில், தற்போது மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.சாலையின் அகலத்திற்கு ஏற்றார்போல வடிகால் அமைக்காமல், பெயருக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மழைக்காலத்தில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மழைக்கும், சேஷாத்ரி சாலையில், மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பது வழக்கம்.சரியாக மழைநீர் வடிகால் அமைக்காதது தான், இதற்கு காரணம். தற்போது, மீண்டும் அதே குறுகிய அளவில், வடிகால் புனரமைக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இச்சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகாலின் அளவு குறித்து ஆய்வு செய்து, தேவைக்கேற்ப மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.