எம்.டி.சி., பஸ்கள் தொடர் விபத்து விசாரணையில் தெரிந்தது காரணம்
சென்னை, மாநகர பேருந்துகளில் ஓட்டுனர் அல்லது நடத்துனரில், ஒருவர் நிரந்தர பணியாளராக இருக்க வேண்டும் என, மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கை:மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தினமும் 3,233 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.ஓட்டுனர், நடத்துனர் பற்றாக்குறையுள்ள நிலையில், அனைத்து பேருந்துகளையும் இயக்கும் வகையில் தற்காலிக ஓட்டுனர், நடத்துனர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். கடந்த சில மாதங்களாக பேருந்துகள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது.இது குறித்து ஆராய்ந்தபோது, விபத்துக்கு உள்ளாகும் பேருந்துகளில் ஓட்டுனர், நடத்துனர் இருவரும் தற்காலிக பணியாளர்களாக இருந்தால், அதன் உண்மைத் தன்மை அறிவது கடினமாக உள்ளது.எனவே, விபத்துகள் ஏற்படாத வகையில், தற்காலிக ஓட்டுனர், நடத்துனர்களை ஒரே பேருந்தில் பணியமர்த்தாமல், இருவரில் ஒருவர் நிரந்தர பணியாளராக பணியமர்த்த வேண்டும். இது குறித்து மண்டல மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.