உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவர்களை ஓட ஓட விரட்டி கொலை வெறி தாக்குதல்

மாணவர்களை ஓட ஓட விரட்டி கொலை வெறி தாக்குதல்

சென்னை, மாநிலக் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர் சுந்தர், 19. இவர், நேற்று மாலை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள், நான்கு பேர் வழிமறித்து, கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பினர்.படுகாயமடைந்த மாணவனை, போலீசார் மீட்டு ஆம்புலன்சில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், சுந்தருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.பெரியமேடு போலீசார் வழக்கு பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களை தேடி வருகின்றனர்.

ஆட்டோ ஓட்டுனர் கைது

வண்ணாரப்பேட்டை, முத்தையால் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் அபிப்பாஷா, 18; இவரது நண்பர் கமலக்கண்ணன், 17. கல்லுாரி மாணவர்களான இருவரும், 'அமேசான்' நிறுவனத்தில் பகுதி நேர டெலிவரி பாயாக பணி புரிகின்றனர்.நேற்று முன்தினம் இரவு பணி முடித்து, மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில், தங்கசாலை செல்ல வேண்டும் எனக் கூறி, ஒரு ஆட்டோவில் ஏறினர்.ஆட்டோவில் டிரைவர் உட்பட இருவர் இருந்தனர். வழியில் மேலும் ஒருவரை ஏற்றிக் கொண்டனர். ஆட்டோ மூலக்கடை மேம்பாலத்தை நெருங்கும்போது, மாணவர்களை மூவரும் கண்மூடித்தனமாக தாக்கி, மொபைல் போனை பறித்து, கீழே தள்ளி விட்டு ஆட்டோவுடன் பறந்தனர். இது குறித்து மாதவரம் போலீசார் விசாரித்தனர்.இதில், வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் விக்னேஷ், 22, அஜய், 20, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை தேடி வருகின்றனர்.

மதுரவாயலில் சம்பவம்

மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில், தனியார் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.நேற்று மாலை கல்லுாரி முடிந்து மாணவர்கள் வெளியே வந்தனர். தாம்பரம் -- புழல் பைபாஸ் சர்வீஸ் சாலையில், கல்லுாரியில் இருந்து வெளியே வந்த மாணவன் ஒருவனை, அங்கிருந்த 10க்கும் மேற்பட்டோர் சாலையில் ஓட ஓட விரட்டி சென்று, கண்மூடித்தனமாக சரமாரியாக தாக்கினர்.அங்கிருந்தோர் இதை பார்த்த பயத்தில் உறைந்தனர். தடுக்க யாரும் முன்வரவில்லை. இந்த காட்சிகளை, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை