புழுதிவாக்கம் வீராங்கல் ஓடையில் ஷட்டர் அமைக்கும் பணி வேகம்
புழுதிவாக்கம்: புழுதிவாக்கம், வீராங்கல் ஓடையின் வடக்கு, தெற்கு பகுதிகள் இணையும் இடத்தில், மாநகராட்சி சார்பில் 'ஷட்டர்' அமைக்கும் பணி, முடியும் தருவாயில் உள்ளது. வீராங்கல் ஓடை, வேளச்சேரி - ஆலந்துார் உள்வட்ட சாலையின் இருபுறமும் அமைந்துள்ளது. இதில், ஆலந்துார் மண்டலத்திற்கு உட்பட்ட ஆதம்பாக்கம், ஆலந்துார் பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர், சாலையின் வடக்கு பகுதி வீராங்கல் ஓடையில் கலக்கிறது. அதேபோல், பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட புழுதிவாக்கம், உள்ளகரம் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், தெற்கு பகுதியில் உள்ள வீராங்கல் ஓடையில் கலக்கிறது. அதன்பின், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைந்து, பகிங்ஹாம் கால்வாய் வாயிலாக கடலில் கலக்கிறது. இந்நிலையில், புழுதிவாக்கம் ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில், வீராங்கல் ஓடையின் வடக்கு - தெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் கால்வாய் அமைந்துள்ளது. இதனால், வடக்கு பகுதியில் இருந்து அதிகப்படியான நீர் தெற்கு பகுதியில் கலப்பதால், புழுதிவாக்கம் பகுதியில் இருந்து மழைநீர் வெளியேறுவது தடைபட்டு, ஊருக்குள் திரும்பி, பகுதி மக்கள் வெள்ள பாதிப்புக்கு ஆளாகினர். இதை தடுக்க, அங்கு சுவர் அமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, வடக்கு பகுதியில் இருந்து அதிகப்படியான மழைநீர், தெற்கு பகுதிக்கு வருவதை தடுக்கும் வகையில், மாநகராட்சியின் சார்பில் 'ஷட்டர்' அமைக்கும் பணி துவங்கி, தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இதனால், புழுதிவாக்கம் வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படும் என, பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.