குழாய் சீரமைத்து ஓராண்டாச்சு சாலை அமைப்பதில் சுணக்கம்
வளசரவாக்கம், வளசரவாக்கம், கடம்பன் தெருவில் உடைந்த கழிவுநீர் குழாய் சீரமைக்கப்பட்ட நிலையில், இன்னும் சாலை சீரமைக்கப்படாததால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வளசரவாக்கம் மண்டலம், 152வது வார்டில் கடம்பன் தெரு உள்ளது. இப்பகுதியில், குடிநீர் வாரியம் சார்பில் கடந்தாண்டு, கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்தன.இந்த நிலையில் கடந்தாண்டு ஆக., மாதம் இச்சாலை திடீரென உள்வாங்கி, பள்ளம் ஏற்பட்டது. தற்காலிகமாக மண் கொட்டி சீர்செய்யப்பட்டது. பின் அக்டோபரில், அதே சாலையின் மற்றொரு இடத்தில் சாலை உள்வாங்கியது.அதேபோல் நவ., மாதம், கடம்பன் தெருவில் உள்ள கழிவுநீர் உந்து நிலைய வாசலில், 10 அடி ஆழம், 3 அடி அகலம் அளவிற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் குழாய் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இப்பணிகள் முடிந்த நிலையில், அப்பள்ளத்தில் மண் கொட்டி சீரமைக்கப்பட்டது.சமீபத்தில் பெய்த மழையில், இச்சாலையில் தண்ணீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறியது. வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, மழைக்காலத்திற்கு முன் சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.