தாம்பரம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்றவர்களால், குரோம்பேட்டை, தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல் ஏற்பட்டது. போதையில் வாகனங்களை தடுத்து நிறுத்தி ரகளை செய்த நபரால் பரபரப்பு நிலவியது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி பணிபுரியும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், நேற்று காலை முதல், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.ஒரே நேரத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குரோம்பேட்டை, தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில், தென் மாவட்டங்களை நோக்கி சென்றவர்களால் காலை மற்றும் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்த நிலையில், தாம்பரத்தில் நேற்று மாலை, போதையில் இருந்த நபர் ஒருவர், சாலையின் நடுவில் நடந்து சென்று, அவ்வழியாக சென்ற வாகனங்கள் மடக்கி ரகளையில் ஈடுபட்டார். இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து, ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தினர். போதை நபரின் இச்செயலால், தாம்பரம் ஜி.எஸ்.டி., பரபரப்பு ஏற்பட்டது.