டாஸ்மாக் ஊழியரை தாக்கிய மூவருக்கு வலை
செம்பியம்:வியாசர்பாடி, கஸ்துாரிபாய் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜராஜன், 50. இவர், பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள 'டாஸ்மாக்' கடையில் பணியாற்றி வருகிறார்.இவர், நேற்று முன்தினம் இரவு 'டாஸ்மாக் கடையின் வாசலில் மது போதையில் படுத்திருந்த நபரை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார்.ஆத்திரமடைந்த அந்த நபர், நண்பர்களுடன் சேர்ந்து அங்கிருந்த கட்டையை எடுத்து, ராஜராஜனை சரமாரியாக தாக்கி தப்பினர். இதில் ராஜராஜனுக்கு இடது காலில் எலும்பு முறிவு மற்றும் முகம், இடது கை முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள், ராஜராஜனை மீட்டு பெரியார் நகர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது குறித்து விசாரித்த செம்பியம் போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, டாஸ்மாக் ஊழியரை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.