மலேஷியாவில் இருந்து அரிய வகை பறவை கடத்தி வந்த மூவர் கைது
சென்னை: மலேஷியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 10 அரிய வகை பறவைகளை, சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மலேஷிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நேற்று காலை சென்னை வந்தது. சென்னையைச் சேர்ந்த ரஹ்மத், 34, என்பவர் உட்பட, மூன்று பேர் குழுவாக, சுற்றுலா சென்று திரும்பியது தெரிய வந்தது. அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தபோது, அவர்கள் முரணாக பேசினர். மூவரின் உடைமைகளை பிரித்து சோதனை செய்ததில், பிளாஸ்டிக் கூடைகளுக்குள், 'பாலி மைனா' என்ற வெள்ளை நிற 10 பறவைகள் உயிருடன் இருந்தன. தொடர் விசாரணையில், பறவைகளை கடத்தி வந்து இனவிருத்தி செய்ய வைத்து, அதிக விலைக்கு விற்க திட்டமிட்டது தெரிய வந்தது. இந்த பறவைகளை கொண்டு வருவதற்கு முறையான எந்த சான்றிதழ்களும் எடுத்துவரவில்லை. இதையடுத்து, பறவைகளை வந்த விமானத்திலேயே, அதிகாரிகள் மீண்டும் மலேஷியாவுக்கு அனுப்பினர். கடத்தி வந்த மூன்று பேரையும் கைது செய்த சுங்க அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவர் என, தெரிவித்தனர்.