உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆள்மாறாட்டம் செய்து அரசு பணி மோசடியில் மேலும் மூவர் கைது

ஆள்மாறாட்டம் செய்து அரசு பணி மோசடியில் மேலும் மூவர் கைது

சென்னை :தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மத்திய அரசு பணியில் சேர்ந்தது தொடர்பான வழக்கில், ஆறு பேர் கைதான நிலையில், மேலும் மூன்று பேரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்நோக்கு பணியாளர்களுக்கான தேர்வு, 2023 செப்., 17ல் நடந்தது. இதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, பணியில் சேர்ந்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரமேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஜூன், 25ல் புகார் அளித்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, ஹரியானாவை சேர்ந்த காஜல், பீகாரைச் சேர்ந்த சகுன் குமார், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த டிங்கு, பிரேம்சிங், அங்கித்குமார், ஜித்துயாதவ் ஆகிய, ஆறு பேரை ஜூலை, 4ல் கைது செய்தனர். கைதானோருக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்ய, ஆய்வாளர்கள் சுமதி, கோகுலகிருஷ்ணன் தலைமையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார், டில்லி, பீகார், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு சென்று விசாரித்ததில், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள், மத்திய, மாநில அரசு பணிகளில் இருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்ய முயற்சி மேற்கொண்டனர். அதன்படி, பீகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த சகுன்குமார் என்பவருக்கு, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய, பீகாரைச் சேர்ந்த ஜெய்சங்கர் பிரசாத், 34; உ.பி.,யை சேர்ந்த டிங்கு என்பவருக்கு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய, உ.பி.,யை சேர்ந்த அரவிந்த்குமார், 30 ஆகிய இருவரை, 25ம் தேதி கைது செய்தனர். கைதான இருவரும், ரயில்வேயில் இளநிலை பொறியாளராகவும், தலைமை வணிக அதிகாரியாகவும் பணிபுரிந்தது தெரிய வந்தது. அதேபோல், ஆக்ராவைச் சேர்ந்த ஜித்து யாதவ் என்பவருக்கு, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத ஆள் ஏற்பாடு செய்து கொடுத்த, உ.பி., யை சேர்ந்த தம்ரமேந்தர் குமார், 32 என்பவரை நேற்று கைது செய்தனர். வழக்கில் தொடர்புைடைய மேலும் பலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ