எழும்பூர்,வணிக நிறுவனங்களின் வாடகைக்கு, மத்திய அரசு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., விதித்திருப்பதை கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்றனர்.இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:வணிக நிறுவனங்களுக்கான வாடகைக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி., 18 சதவீதம் விதித்திருப்பது ஏற்புடையதல்ல. வாடகைக்கு வரி விதிப்பு என்பது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இதை, மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.வணிகர்கள் கணக்கு தாக்கல் செய்வதில் சிறு பிழைகள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்களை அழைத்து தீர்வு காணாமல், மாநில, மத்திய வரிகள் துறை அதிகாரிகள் பல மடங்கு அபராதம் விதிக்கின்றனர்.மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆதரவாகவும், சில்லரை வணிகத்திற்கு எதிராக செயல்படுகின்றனர். மாநில அரசு தொழில் உரிம கட்டணத்தை ஐந்து மடங்கு உயர்த்தி இருப்பது உள்ளிட்டவற்றை கண்டித்து, நெல்லை, கோயம்புத்துார், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும். இந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசு ஏற்காவிட்டால், தமிழகம் முழுதும் ஒருநாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.