ரூ.1.56 கோடி டிரேடிங் மோசடி உடந்தையாக இருந்த 2 பேர் கைது
ஆவடி : மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன், 55; கட்டடப் பொறியாளர். கடந்த ஜூன் மாதம் 'வாட்ஸாப்'பில் ஆன்லைன் வர்த்தகம் குறித்த விளம்பரம் ஒன்று வந்துள்ளது. மூன்று வாரங்கள் குழுவில் வர்த்தகம் தொடர்பாக மற்றவர்கள் பதிவு செய்யும் விபரங்கள், முதலீடு குறித்த தகவல்கள் கண்காணித்துள்ளார். இதில் நம்பிக்கை ஏற்படவே, ஜூன் 26ம் தேதி அக்குழுவில் இணைந்து, 'பயனர் லிங்க்' வாயிலாக, 'ஆன்லைன்' அக்கவுண்ட் உருவாக்கி, முதலில் 5,000 ரூபாய் முதலீடு செய்துள்ளார்.அதற்கு குறிப்பிட்ட தொகை கமிஷன் வந்துள்ளது. இதையடுத்து, அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, பல்வேறு தவணைகளில் 1.56 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.செப்டம்பர் மாதம் முதலீட்டில் கிடைத்த லாபத்தை எடுக்க முயற்சித்தபோது, அவரால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.புகாரை இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில், பி.ஏ., படித்து சொந்தமாக தொழில் செய்து வந்த புதுச்சேரியைச் சேர்ந்த பிரகாஷ், 41, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார், 29, மோசடி நபர்களுக்கு தரகர் போன்று உதவியது தெரியவந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று வேலுார் சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.