மேயர் பெயரில் வசூல் வேட்டை நடத்திய இருவர் சிக்கினர்
அம்பத்துார், ஆக. 24-அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம் அருகே, 'குளோபல் டெக்' எனும் பெயரில், கணினி பயிற்சி மையம் நடத்தி வருபவர் ஷேக் முகமது அலி, 40; மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலர். இவரது அலுவலக தொலைபேசி போனில், இம்மாதம் 21ம் தேதி தொடர்பு கொண்ட பிரகாஷ் என்பவர், தான் சென்னை மாநகராட்சியில் உதவி கமிஷனராக இருப்பதாகவும், மேயர் பிரியா பங்கேற்கும் அம்பத்துார் அரசு உதவி பெறும் பள்ளி நிகழ்ச்சிக்காக 10,000 ரூபாய் தர வேண்டும் எனவும், மறுத்தால் மையத்தின் உரிமம் ரத்து செய்வதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷேக் முகமது அலி, 2,000 ரூபாயை, பிரகாஷின் கூட்டாளியான பாண்டியன் என்பவரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில், அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம் பின்புறம் இருந்த பாண்டியனை, கணினி பயிற்சி மைய பெண் ஊழியர்களும், பிரகாஷை, நிறுவன உரிமையாளர் ஷேக் முகமது அலியும் பிடித்து, அம்பத்துார் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பாண்டியனின் உண்மையான பெயர் பர்னபாஸ் என்பதும், மோசடியில் ஈடுபடும்போது மட்டும் பாண்டியன் பெயரை பயன்படுத்தியதும் தெரிந்தது. கணினி பயிற்சி மையத்தில் வாங்கிய 2,000 ரூபாயை, நேற்று மதியம் திருப்பி அளிக்கப்பட்டது. பணத்தேவை ஏற்படும் போதெல்லாம், மேயர் பிரியா பெயரை பயன்படுத்தி, அம்பத்துாரில் உள்ள வணிக நிறுவனங்களை மிரட்டி, பணம் பறித்ததை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். போலீசார் அவர்களிடம், மேலும் விசாரித்து வருகின்றனர்.